மாநிலங்களவையில் தலித்துகளின் பிரச்னை குறித்து பேசுவதற்கு போதிய நேரம் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தனது எம்.பி. பதவியை பகுஜன் சமாஜ் கட்சித் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்தார்.
மாநிலங்களவையில் மாயாவதி செவ்வாய்க்கிழமை பேசியபோது, பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் (சஹாரன்பூரில்) தலித்துகள் குறிவைத்து தாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், 'சஹாரன்பூரில் வசிக்கும் தலித்துகள், எந்த பேரணியையும் நடத்துவதில்லை என்றும், ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி அம்பேத்கரின் சிலையை நிறுவுவதில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புக் கொண்டனர்; ஆனால், மகாராணா பிரதாப்பின் ஆதரவாளர்களோ மே மாதம் 5-ஆம் தேதி பேரணி நடத்தியுள்ளனர்' என்று குற்றம்சாட்டினார்.
அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் குறுக்கிட்டு, மாயாவதிக்கு பேசுவதற்கு அளிக்கப்பட்ட 3 நிமிட அவகாசம் முடிந்துவிட்டதை சுட்டிக்காட்டி, அடுத்த உறுப்பினரை பேசும்படி கேட்டுக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மாயாவதி, குரியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது மாயாவதி, 'எனது சமூகம் மற்றும் தலித்துகள் சார்ந்த பிரச்னை குறித்து பேசுவதை எப்படி நீங்கள் தடுப்பீர்கள்? நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. ஆதலால் இன்னொரு உறுப்பினரை பேசும்படி உங்களால் அழைக்க முடியாது' என்றார். இதைக் கேட்ட குரியன், 'விதி எண் 267-ன் கீழ் நோட்டீஸ் அளித்து, குறிப்பிட்ட பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று உறுப்பினரால் கோரிக்கை மட்டுமே விடுக்க முடியும். அவையில் பேசி, விவாதத்தை உறுப்பினர் தொடங்க முடியாது' என்று விளக்கமளித்தார். இந்தப் பதிலை மாயாவதி ஏற்கவில்லை.
குரியனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாயாவதி பேசினார். அப்போது அவர், ' தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பாக கருத்துகளை தெரிவிக்க எனக்கு அனுமதியளிக்கப்படாதபோது, இந்த அவையில் நான் இருப்பது சரியாக இருக்காது.
எனவே, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப் போகிறேன்' என்றார். பின்னர் அவையில் இருந்து வேகமாக அவர் வெளியேறி விட்டார்.
பிஎஸ்பி எம்.பி. சதீஷ் மிஸ்ராவும் மாயாவதியை தொடர்ந்து சென்றார். பின்னர் அவர் மட்டும் திரும்பி வந்து, தலித்துகள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினார்.
மாயாவதி மன்னிப்பு கேட்க மத்திய அரசு வலியுறுத்தல்: இதற்கு கடும் ஆட்சேபணைத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, 'அவைத் தலைவரை மாயாவதி மிரட்டியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்றார். இதைக் கேட்ட பிஎஸ்பி உறுப்பினர்கள், அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத்தும் பேசினார்.
எனினும், மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியை செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை மாயாவதி அளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாநிலங்களவைத் தலைவரை நேரில் சந்தித்து, எனது ராஜிநாமா கடிதத்தை அளித்து விட்டேன். தலித்துகள் தொடர்புடைய பிரச்னைகள் குறித்து அவையில் என்னால் பேச முடியாமல் போவது, நல்லது அல்ல.
அவையில் நான் பேசுவதற்காக எழுந்திருக்கும்போது, அதை மத்திய அரசு அனுமதிப்பதில்லை. நான் பேசும்போது, அவர்களது (தேசிய ஜனநாயகக் கூட்டணி) உறுப்பினர்கள் எழுந்து குறுக்கிடுகின்றனர் என்றார் மாயாவதி.