ரூ.2,000 நோட்டை வாபஸ் பெறத் திட்டமா?: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா? என்று


புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா? என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் உடனடிக் கேள்வி நேரத்தின்போது, சமாஜவாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசியதாவது:
ரூ.2,000 நோட்டை வாபஸ் பெற மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. ரூ.2,000 நோட்டை அச்சிட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாரம்பரிய முறைப்படி, நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா?
இதுவரை, ரூ.3.2 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. தற்போது, ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டது. ரிசர்வ் வங்கி, அதிகாரப்போக்குடன் செயல்பட முடியாது.
மத்திய அரசு ஏற்கெனவே, ஒரு முறை ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளது. அடுத்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு திட்டமிட்டு வருகிறது என்றார் அவர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை என்றார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த நரேஷ் அகர்வால், ''முந்தைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது; மத்திய அரசுதான் முடிவெடுத்து, அதை செயல்படுத்தியது. அதேபோல், இரண்டாவது முறையாக, ரூ.2,000 நோட்டை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக, நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.
இதே கருத்தை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத்தும் வலியுறுத்தினார். மேலும், ரூ.1,000 நாணயத்தை வெளியிடும் திட்டம் உள்ளதா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: ரூ.1,000, ரூ.200, ரூ.100 நாணயங்கள் வெளியிடப்பட இருப்பதாக அன்றாடம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இதில், உண்மை நிலையை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.
இதே கேள்வியை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சரத் யாதவ் ஆகியோர் எழுப்பினர்.
ஜேட்லி மெளனம்: அந்த நேரத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவையில் இருந்தும், அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...