ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் முன்னாள் கார் ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்

ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஷீனா போரா உடலை அப்புறப்படுத்த நல்ல இடத்தை இந்திராணி முகர்ஜி தேடியதாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் கூறியுள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் முன்னாள் கார் ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்

மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஷீனா போரா உடலை அப்புறப்படுத்த நல்ல இடத்தை இந்திராணி முகர்ஜி தேடியதாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் நேற்று அவர் அளித்த வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஷீனா போரா கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள ஷ்யாம்வர் ராய் கூறுகையில், ஷீனா போராவுடன் சேர்த்து, அவரது சகோதரர் மிகைலையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்திராணி திட்டமிட்டார்.

2012ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டில் இருந்த இந்திராணி, தன்னுடன் ஸ்கைப் சேட்டில் பேசும் போது, தனது முந்தைய கணவருக்குப் பிறந்த மிகைல் மற்றும் ஷீனாவை கொலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த கொலைகளுக்கு நான் உதவி செய்தால், ஆயுள் வரை தனக்கு வேலை வழங்குவதாகவும், எனத குழந்தைகளின் கல்வி செலவையும், குடும்பத்துக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் அவரே ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

அவ்வப்போது, ஷீனாவும், மிகைலும், இந்திராணியை, அம்மா என்று சொல்லிவிடுவோம் என மிரட்டி வந்துள்ளனர். அதில்லாமல், மூவருக்குள்ளும் வேறு பல சர்ச்சைகளும் இருந்து வந்தன. ஆனால் அதற்கு முன்பு, இந்திராணி, தனது நண்பர்களிடம், ஷீனா தனது சகோதரி, மிகைல் சகோதரன் என்று கூறியிருந்தார்.

மும்பை மற்றும் லோன்வாலா பகுதிகளில் ஷீனா மற்றும் மிகைல் உடல்களை யாருக்கும் தெரியாமல் புதைக்க நல்ல இடமாக பார்க்குமாறும் இந்திராணி என்னிடம் கூறியிருந்தார் என்று தெரிவித்தார்.

மேலும், ஷீனாவை, இந்திராணியும், அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து எப்படி கொலை செய்தனர் என்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, ஷீனாவைக் கொலை செய்த பிறகு இந்திராணி, "ஷீனா கேட்ட 3 படுக்கை வசதி கொண்ட வீடு கிடைத்துவிட்டது" என்று கூறியதையும், பிறகு ஷீனாவின் உடல் ஒரு பையில் வைத்து மூடப்பட்டதையும் ராய் கண்கூடாக பார்த்துள்ளார்.

அதன்பிறகு மிகைலையும் கொலை செய்ய இந்திராணி முயன்றுள்ளார். ஆனால், மதுவில் அதிகப்படியான மயக்க மருந்து கலந்தும், மிகைல் தெளிவாக இருந்ததால், அவரைக் கொலை செய்யும் முயற்சியை இந்திராணி கைவிட்டுள்ளார்.

மேலும், இரண்டு உடல்களையும் எடுத்துச் செல்வது கடினம் என்பதால், முதலில் ஷீனாவின் உடலை அப்புறப்படுத்திவிட்டு, மிகைலை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இந்திராணி முடிவெடுத்துள்ளார்.

பிறகுதான், ஷீனா போராவை வெளியே எடுத்து அவளது முகத்துக்கு இந்திராணி மேக்கப் போட்டு காரில் அமர வைத்துள்ளார். அங்கிருந்து ராய்காட் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஷீனா போராவின் உடலை வீசி, அதன் மீது கன்னா பெட்ரோல் ஊற்ற, இந்திராணி தீ வைத்தார் என்றும் ஷ்யாம்வர் ராய் நீதிமன்றத்தில் கூறினார்.

தொடர்ந்து ஷ்யாம்வர் ராயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com