இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கொல்கத்தா சிறையில் நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சு வலி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன், கொல்கத்தா சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.

News image
சென்னையில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன்.
Updated On :21 ஜூன் 2017, 10:00 pm

DIN

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன், கொல்கத்தா சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார். அதற்கடுத்த சில நிமிடங்களில் தமக்கு நெஞ்சு வலிப்பதாக கர்ணன் கூறியதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சையளித்தனர்.
தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் அவரை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கைது செய்யப்பட்ட கர்ணன் கொல்கத்தாவுக்கு புதன்கிழமை காலை அழைத்து வரப்பட்டார். இதற்காக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், செய்தியாளர்கள் அவரை நெருங்க இயலாதபடி தடுப்பு அரண்களை வைத்து போலீஸார் சில ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக, விமான நிலையத்திலேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள மாநில சிறைச் சாலைக்கு கர்ணனை அழைத்துச் சென்ற போலீஸார், வழக்கமான நடைமுறைகளின் அடிப்படையில் அவரை சிறையில் அடைத்தனர். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் தமக்கு நெஞ்சு வலிப்பதாக கர்ணன் கூறியுள்ளார்.
இதையடுத்து, மருத்துவர்கள் உடனடியாக விரைந்து வந்து அவரைப் பரிசோதித்தனர். இசிஜி எனப்படும் இருதயத் துடிப்பு செயல்பாட்டு பரிசோதனைகளும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீதிபதி கர்ணனுக்கு 62 வயதாகிறது. சிறைக்குள் அவர் அடைக்கப்பட்ட பிறகு உடல் நலம் குன்றியிருப்பதைப் போல காணப்பட்டார். இந்நிலையில், திடீரென நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதால் சிறை மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சையளித்தனர். தேவையான பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகு தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சையளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.