150 ஆண்டு கால மரபை முடிவுக்குக் கொண்டு வர மோடி அரசு திட்டம்?

வரும் 2018ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக நவம்பரிலேயே தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
150 ஆண்டு கால மரபை முடிவுக்குக் கொண்டு வர மோடி அரசு திட்டம்?


புது தில்லி: வரும் 2018ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக நவம்பரிலேயே தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 150 ஆண்டு காலமாக இருக்கும் மரபை மாற்றி, காலண்டர் ஆண்டை ஒட்டியே நிதியாண்டையும் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

அதாவது, மோடி தலைமையிலான மத்திய அரசு, நிதியாண்டை ஏப்ரல் - மார்ச் என்பதை மாற்றி ஜனவரி - டிசம்பர் என்று மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளின் நிதியாண்டு, ஜனவரி - டிசம்பர் என காலாண்டர் ஆண்டை ஒட்டியே இருப்பதால், அதைப் போல இந்தியாவிலும் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நிதியாண்டை இந்தியா மாற்றினால், சர்வதேச அளவில் தொழில் செய்து வரும் பல தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். அதாவது, இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தங்களது கிளைகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் ஏப்ரல் - மார்ச் நிதியாண்டையும், உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஜனவரி - டிசம்பர் என்ற நிதியாண்டையும் கடைபிடித்து வருகின்றன. 

ஆனால், இந்தியாவிலும் நிதியாண்டு மாற்றப்பட்டால் அவர்களது வேலைகள் எளிதாகும்.

இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்.

அதே சமயம், நிதியாண்டை மாற்றியமைப்பது என்பது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல, பல்வேறு பணிகளில் மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக மத்திய நிதிநிலை அறிக்கை. இதனை முன்கூட்டியே தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். வரி விதிப்பு முறையில் மாற்றம், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் காலங்களில் மாற்றம் கொண்டு வருவதும் அவசியம்.

அதே போல பல இந்திய நிறுவனங்களும் தங்களது ஆவணங்களையும், பணி கட்டமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது.

இது, இதர உலக நாடுகளுடனான நமது கணக்கை நேர் செய்து கொள்வது போல என்கிறார் பொருளாதார நிபுணர் டிகே ஜோஷி.

நிதியாண்டை மாற்றியமைக்கும் போது ஏற்படும் சவால்கள் குறித்து ஆராய மத்திய அரசால் அமக்கப்பட்ட ஷங்கர் ஆச்சார்யா குழுவினர் அளித்த அறிக்கையில், நிதியாண்டை மாற்றி அமைக்கும் போது, ஒவ்வொரு நிதியாண்டும் தொடங்கும் போது மழைக்காலம் உச்சதில் இருக்கும். ராபி மற்றும் காரீப் அறுவடையும் தீவிரமாக இருக்கும். 

அதே போல, பிப்ரவரி மாதத்துக்கு முன்பே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதாக இருந்தால், அடுத்து வரும் நிதியாண்டின் பருவ மழை எப்படி இருக்கும் என்பது குறித்த வானிலை முன்னறிவிப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் திடீரென பரிந்துரைக்கப்பட்டதல்ல, மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதலே இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரயில்வே நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்படுவதை மாற்றி, பொது நிதிநிலை அறிக்கையுடனேயே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது நிதியாண்டையே மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com