ஜந்தர் மந்தரில் போராடுவோருக்கு தில்லி காவல் துறையினர் அறிவுரை
தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் உள்ளிட்ட சில குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள், வேலிகள் போன்றவற்றை நிரந்தரக்


தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் உள்ளிட்ட சில குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள், வேலிகள் போன்றவற்றை நிரந்தரக் குடில் போல அமைக்கக் கூடாது என்று நகர காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இது தொடர்பாக ஜந்தர் மந்தர் பகுதியில் புது தில்லி காவல் துறை துணை ஆணையர் பி.கே.சிங் தலைமையில் உயரதிகாரிகள் குழு வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தது. அப்போது, சில போராட்டக் குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பிளாஸ்டிக் கதவுகள், வேலிகள் போன்றவற்றை 'தாற்காலிகக் குடில்' போல அமைத்து அமர்ந்திருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். அவற்றை அந்த இடத்தில் இருந்து காவல் துறையினர் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 17-ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் துணி ரிப்பன்களை தடுப்பு போல கட்டியிருந்தனர். அவற்றை அகற்றிய காவல் துறையினர், போராட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிரந்தரக் குடில் போல தடுப்புகளையோ வேலிகளையோ பயன்படுத்த அனுமதி இல்லை. அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பி.கே.சிங் கூறியதாவது: ஜனநாயக முறைப்படி மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் சட்டத்தில் இடம் உண்டு. இதற்கென தலைநகரில் ஜந்தர் மந்தர் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் துறையிடம் உரிய முன் அனுமதி பெற்ற அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனி நபர்கள் இங்கு போராட்டம் நடத்தத் தடை இல்லை. ஆனால், போராட்டக் குழுக்களின் போர்வையில் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் ஊடுருவி ஜந்தர் மந்தர் பகுதியை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற சோதனையை அவ்வப்போது மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குவோம் என்றார் பி.கே.சிங்.
இந்நிலையில், காவல் துறையின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்த சில போராட்டக் குழுவினர் 'தில்லியில் நிலவும் கடுமையான வெப்பம், இரவில் நிலவும் குளிர் மற்றும் மகளிர் உடைகளை மாற்றிக் கொள்ள இதுபோன்ற தடுப்புகளை அமைத்தோம். அதை காவல் துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர்' என முறையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...