காஷ்மீரில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரம்: 2 இந்திய வீரர்களின் தலை துண்டிப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் 250 மீட்டர் ஊடுருவி வந்து பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரின் தலைகளை பாகிஸ்தான் படையினர் துண்டித்துள்ளனர்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் 250 மீட்டர் ஊடுருவி வந்து பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரின் தலைகளை பாகிஸ்தான் படையினர் துண்டித்துள்ளனர்.
பாகிஸ்தான் படையினரின் இந்த அராஜக செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய நிலைகள் மீது ராக்கெட்டுகளை வீசியதுடன், தானியங்கி துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுப்பதற்காக பிஎஸ்எஃப் முகாமில் இருந்து 8 வீரர்கள் வெளியே வந்தனர். அப்போது அவர்கள் மீது, இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் அளவுக்கு ஊடுருவி வந்து மறைந்திருந்த பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கிய படைப்பிரிவைச் சேர்ந்த சுபேதார் பரம்ஜித் சிங், பிஎஸ்எஃப் படைப்பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரேம் சாகர் ஆகிய 2 பேர் பலியாகினர். பிஎஸ்எஃப் காவலர் ராஜீந்தர் சிங் என்பவர் காயமடைந்தார்.
இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "உயிரிழந்த 2 வீரர்களின் சடலங்கள் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினரால் சிதைக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியபோது, 2 பேரின் தலைகளும் பாகிஸ்தான் எல்லை அதிரடி படையினரால் துண்டிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார். மேலும் அவர், பாகிஸ்தான் படையினர் நீண்டநாளாக திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக குற்றம்சாட்டினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜவீத் பாஜ்வா அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காஷ்மீரில் தனிநாடு கேட்டு போராடுவோரை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் அறிவித்த சில தினங்களில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதேபோல், கடந்த 2016, 2013, 2008, 1999-ஆம் ஆண்டுகளிலும் எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்களை கொலை செய்து அவர்களது தலைகளை பாகிஸ்தான் படையினர் துண்டித்துள்ளனர்.
இந்தியா கண்டனம்
பாகிஸ்தான் படையினரின் இந்த அத்துமீறலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் (பொறுப்பு) அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வீரர்களின் சடலங்கள் சிதைக்கப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டமாகும். இதை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள், போர் காலத்தில் கூட நடைபெற்றது இல்லை. இதுவொரு கண்டிக்கத்தக்க மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போகாது; பாகிஸ்தான் படையினரின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்திய பாதுகாப்புப் படை தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஒட்டுமொத்த நாடும் நம்புகிறது என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் ஆலோசனை
எல்லையில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் குறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில் மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷி, புலனாய்வு படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கினர். அப்போது எல்லையில் தீவிர கண்காணிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
தகுந்த பதிலடி- இந்தியா
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாகிஸ்தானின் வெறுக்கத்தக்க செயலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகருக்கு இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் திங்கள்கிழமை சென்றார்.
பாகிஸ்தான் மறுப்பு
ஜம்மு-காஷ்மீருக்குள் எல்லை தாண்டிவந்து இந்திய வீரர்கள் 2 பேரின் தலைகளை துண்டித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா குற்றம்சாட்டுவது போன்று, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எந்த அத்துமீறலிலும் ஈடுபடவில்லை. 2 வீரர்களின் சடலங்களை சிதைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் உயர்ந்த நாகரிகம் கொண்டது. வீரரை ஒருபோதும் அவமதிக்காது என்று அந்த அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
வங்கிப் பணத்தை ஏற்றி வந்த வேன் மீது தாக்குதல்: 5 போலீஸார் உள்பட 7 பேர் சாவு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் வங்கிப் பணத்தை ஏற்றி வந்த வேனில் இருந்த போலீஸார் உள்பட 7 பேரை பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் வங்கியின் குல்காம் மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு தம்கால் ஹன்ஜி போராவில் இருந்து பணத்தை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் திங்கள்கிழமை பிற்பகல் வந்தது. அப்போது அந்த வேனை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேனில் இருந்த 5 போலீஸார், 2 வங்கி ஊழியர்களை வெளியே இழுத்துவந்து அவர்களை சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 4 போலீஸாரும், 2 வங்கி ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த ஒரு காவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாக்குதலில் பலியான 5 போலீஸாரில், ஒருவர் துணை ஆய்வாளர் ஆவார். வேனில் இருந்த வங்கிப் பணத்தை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...