உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் கபில் மிஸ்ரா
'ஆம் ஆத்மி' தலைவர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்களை வெளியிடக் கோரி, தில்லி அரசின் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத்


'ஆம் ஆத்மி' தலைவர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்களை வெளியிடக் கோரி, தில்லி அரசின் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இந்த போராட்டத்தில் அவரை இளைஞர் ஒருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லி சிவில் லைன்ஸில் பகுதியில் அதாதுர் ரஹ்மான் லேனில் உள்ள அரசு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கபில் மிஸ்ரா உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். அமைச்சராக இருந்தபோது வழங்கிய அரசு இல்ல வளாகத்தில் தாற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டது. அதில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உண்ணாவிரதத்தைத் அவர் தொடங்கினார்.
இது குறித்து பின்னர் கபில் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆம் ஆத்மியின் தலைவர்களான சத்யேந்திர ஜெயின், ஆஷிஷ் கேதன், ராகவ் சத்தா, சஞ்சய் சிங், துர்கேஷ் பாதக் ஆகியோரது வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் வலியுறுத்துவதற்காக இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளேன். இது தர்னா அல்ல. சத்தியாகிரகப் போராட்டமாகும்' என்றார்.
கடிதம்: உண்ணாவிரதப் போராட்டம் குறித்து முதல்வர் கேஜரிவாலுக்கு கபில் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில், 'சத்யேந்திர ஜெயின், ஆஷிஷ் கேதன், ராகவ் சத்தா, சஞ்சய் சிங், துர்கேஷ் பாதக் ஆகியோரது வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்களையும், சிலர் கூறுவது போல கட்சிக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் ஹவாலா பணம், நன்கொடை ஆகிய விவரங்களையும் பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை வெளியிடும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை' என தெரிவித்துள்ளார்.
மிரட்டல்: இதற்கிடையே, கபில் மிஸ்ராவின் செல்லிடப்பேசிக்கு செவ்வாய்க்கிழமை வரப்பெற்ற வெளிநாட்டு தொலைபேசி அழைப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அவரது உதவியாளர் அருண் திவாரி கூறுகையில், 'செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் கபில் மிஸ்ராவின் செல்லிடப்பேசிக்கு வெளிநாட்டு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து வந்த அழைப்பையும் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து கபிஸ் மிஸ்ராவின் கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ் அப்) 'சுட்டுக் கொல்வோம்' என்ற மிரட்டல் செய்தி கிடைக்கப் பெற்றது. இது தொடர்பாக காவல்துறையிடம் இதுவரை புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றார்.
கபில் மிஸ்ராவுக்கு மிரட்டல் விடுத்த வெளிநாட்டு செல்லிடப்பேசியின் எண் வளைகுடா நாட்டிலிருந்து வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தாக்க முயற்சி

உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள கபில் மிஸ்ராவை அன்கித் பரத்வாஜ் என்பவர் தாக்க முயன்றபோது தில்லி காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்தனர்.
இந்த தாக்குதல் முயற்சி குறித்து கபில் மிஸ்ரா கூறுகையில், 'என்னை நோக்கி வந்த நபர் என் கழுத்தில் இறுக்கி கொலை செய்துவிடுவதாக கூறினார்.
என்னுடைய உதவியாளர்கள் அவரை தடுத்தனர். காவலர்களும் அவரை மடக்கிப் பிடித்து அங்கிருந்து தூக்கிச் சென்றனர்' என்றார். இது குறித்து அன்கித் பரத்வாஜ் கூறுகையில், 'என்னை யாரும் இங்கு அனுப்பவில்லை. நானாவே வந்தேன். ஆம் ஆத்மி கட்சியில் உள்ளேன்' என்றார்.
ஆனால், அந்த நபர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்ற தகவலை அக்கட்சி மறுத்திருப்பதுடன், அவர் பாஜக இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, கபில் மிஸ்ராவை தாக்க முயன்ற அன்கித் பரத்வாஜ் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என பாஜக இளைஞர் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...