rains1
rains1

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். சுதேவன் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தற்போதைய வானிலை ஆய்வு தகவல்கள், கேரளத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கின்றன. கேரளத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பரவலாக திங்கள்கிழமை காலை முதல் மழை பெய்தது. வடக்குப் பகுதியின் சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. இந்நிலை, செவ்வாய்க்கிழமை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அடுத்த 5 நாள்களில் கனமழையும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று எஸ்.சுதேவன் தெரிவித்தார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி, தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை பெய்யத் தொடங்குமானால் 2 நாள்களுக்கு முன்னதாக தொடங்குகிறது என்று அர்த்தமாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழையினால் பெரிய அளவில் பயனிருக்காது. தென் மாவட்டங்களில் மட்டும் சிறிது மழை பெய்யக்கூடும். எனினும், தமிழகத்தில் பரவலாக தற்போது வறட்சி போன்ற சூழல் காணப்படும் நிலையில், தென்மேற்கு பருவமழையின் மூலமாவது மழை பெய்யாதா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com