

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இல்லாத சிறப்பு அதிகாரம் தில்லி துணைநிலை ஆளுநருக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்தது.
தில்லி அதிகார மோதல் விவகாரம் தொடர்பாக தில்லி அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை விசாரணை தொடங்கியது.
தில்லி அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியன் ஆஜராகி முன் வைத்த வாதம்:
அரசியலமைப்பு விதி 239ஏஏ(3)(ஏ) பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும், அவற்றுக்குப் பின்னால் உள்ள விழுமியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைத்து, அதை பொறுப்பாக்கும் வகையில் அரசியலமைப்பு விதி 239ஏஏ(3)(ஏ) பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு விதி 239ஏஏ பிரிவின் படியே சட்டப்பேரவை, முதல்வர், அமைச்சரவை உருவாக்கப்படுகிறது. அரசியலமைப்பு விதி 239ஏஏ பிரிவு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் வார்த்தை அளவில் மட்டும் விளக்கம் அளித்துள்ளது. சட்டப்பேரவையை உருவாக்கினால், அது சட்டம் இயற்றும் அதிகாரத்தை பெற்றிருக்க வேண்டும். அதிகாரம் எனக் குறிப்பிடுவது நிர்வாக அதிகாரம் அல்ல. சட்டம் இயற்றும் அதிகாரமாகும். நாடாளுமன்ற அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. அதே சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது. அமைச்சர்கள் இல்லாமல் அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் கூட்டம் நடத்துகிறார். சில நேரங்களில் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகள் தொடர்பாக எவ்வித முடிவையும் மேற்கொள்ளாமல் துணைநிலை ஆளுநர் தாமதப்படுத்துகிறார். உதாரணமாக தில்லியில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கோப்பைக் குறிப்பிட முடியும். துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளன. தில்லி அரசு செயல்படுவதில் துணைநிலை ஆளுநர் தடைகளை உருவாக்கி வருகிறார்" என்றார்.
வாதங்களுக்கு இடையே தலைமை நீதிபதி அமர்வு, கோபால் சுப்ரமணியனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அரசியல் சாசன அமர்வு தெரிவித்ததாவது:
அரசியலமைப்புச் சட்டத்தில் தில்லிக்கு மட்டும் 239ஏஏ பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இல்லாத சிறப்பு அதிகாரம் தில்லி துணைநிலை ஆளுநருக்கு உள்ளது. தில்லி அரசுக்கென சட்டத்திட்டம் ஏற்கெனவே உள்ளது. அதன் அடிப்படையில் தில்லி அரசு செயல்படலாம். சட்டங்கள் இல்லையென்றால் தில்லி சட்டப்பேரவை, துணைநிலை ஆளுநரின் ஒருங்கிணைப்புடன் புதிய சட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால், அதில் மாற்றுக் கருத்து வந்தால், துணைநிலை ஆளுநரின் முடிவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். அதேநேரத்தில் இதுபோன்ற பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண குடியரசுத் தலைவருக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைக்கலாம் என சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
இதையடுத்து, நீதிபதி தீபக் மிஸ்ரா, "துணைநிலை ஆளுநருக்கு அமைச்சர்கள் ஆலோசனை வழங்கும் வாதத்தை ஒப்புக்கொள்ள முடியாது" என்றார்.
நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "யூனியன் பிரதேசங்களில் உள்ள நிர்வாக அதிகாரத்தை துணைநிலை ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலைவர் செயல்படுத்துகிறார். மிகுதியான அதிகாரம் இருக்கும் சூழலில் நீதிமன்றம் தலையிட முடியும். அரசியலமைப்பு விதி 239ஏஏ(3)(ஏ) பிரிவுகள் படியே ஒவ்வொரு அரசும் இயங்க வேண்டும். அந்தப் பிரிவுகளில் தில்லி அரசு, யூனியன் பிரதேச அரசுகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறைக்கப்பட்டுள்ளன" என்றார். பின்னர் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) ஒத்திவைத்தனர்.
பின்னணி: தில்லியில் ஆளும் அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது என்று குறிப்பிட்டு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கையை ரத்து செய்வது, அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது, முக்கிய விவகாரங்களில் தில்லி அமைச்சரவையின் ஆலோசனைப்படி மட்டுமே துணைநிலை ஆளுநர் செயல்பட உத்தரவிடுவது உள்ளிட்டவை தொடர்பாக 9 மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் தில்லியின் ஆட்சி அதிகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தில்லி அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணையை தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.