இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஹஜ் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு

ஹஜ் மானியத்தை அடுத்த ஆண்டு (2018) முதல் நிறுத்தி விடவும், அதேவேளையில் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் நலவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:55 pm

DIN

ஹஜ் மானியத்தை அடுத்த ஆண்டு (2018) முதல் நிறுத்தி விடவும், அதேவேளையில் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் நலவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரைக்கு நீண்ட காலமாக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2012-இல் அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஹஜ் மானியத்தை படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு முன் ஹஜ் மானியத்துக்காக ஆண்டுதோறும் ரூ.650 கோடியை அரசு செலவிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஹஜ் மானியத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வந்தது. கடந்த ஆண்டு இத்தொகை ரூ.450 கோடியாக இருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் ஹஜ் கொள்கை மறுபரிசீலனை செய்வதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, வெளியுறவுத்துறை, விமானப் போக்குவரத்துத் துறை, ஏர் இந்தியா, இந்திய ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவின் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பின்னர் செய்தியாளரிடம் கூறுகையில், ஹஜ் மானியம் அடுத்த ஆண்டு நிறுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இந்தக் குழுவின் கூட்டத்தில் சில தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகளை அரசுத் தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும், அதேவேளையில் 2018-ஆம் ஆண்டிலேயே மானியம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியதாகவும் தெரிகிறது. ஹஜ் மானியத்துக்காக ஒதுக்கப்படும் நிதியானது இனி நாட்டின் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், மேற்கண்ட குழுவில் பங்கேற்ற ஹஜ் கமிட்டி தரப்பினர் அரசின் இந்த முடிவை எதிர்த்ததாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஹஜ் மானியத்தை வரும் 2022-க்குள் படிப்படியாக நிறுத்தலாம் என்று அவர்கள் யோசனை தெரிவித்ததாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.