14 பாகிஸ்தானியர்களை விடுவித்தது இந்தியா; 2,600 சீக்கியர்களுக்கு விசா அளித்தது பாகிஸ்தான்

இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
Updated on
1 min read

இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மத நிறுவனர் குருநானக் பிறந்த இடத்தில் வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பிறந்த தின விழாவில் பங்கேற்க 2,600 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது நாட்டுச் சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான்அளித்த அவசர பயண ஆவணம் மூலம் அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, கடந்த 28-ஆம் தேதி இரு பாகிஸ்தானியர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு விசா அளித்துள்ளது குறித்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தானில் மதரீதியான சுற்றுலாவை மேம்படுத்தவும், இருநாட்டு மக்களிடையிலான தொடர்பை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு வருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, வேறு நாடுகளைச்சேர்ந்த சீக்கியர்களுக்கும் அவர்களது மத நிகழ்ச்சியில் பங்கேற்க விசா அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com