மறைந்த கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு அருளாளர் பட்டம்
மத்தியப் பிரதேசத்தில் 22 ஆண்டுகளுக்கு முன் ஓடும் பேருந்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு கத்தோலிக்க மதத் தலைவர்


மத்தியப் பிரதேசத்தில் 22 ஆண்டுகளுக்கு முன் ஓடும் பேருந்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் சனிக்கிழமை 'அருளாளர்' பட்டத்தை வழங்கினார்.
இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போப் பிரான்சிஸின் கடித்தத்தை இத்தாலிய கத்தோலிக்க தேவாலயத் தலைவர் ஏஞ்சலோ அமாட்டோ வாசித்தார்.
ராணி மரியாவுக்கு அருளாளர் பட்டம் வழங்குவதற்கான போப் பிரான்சிஸின் பிரகடனத்தை அவர் ஆங்கிலத்தில் வாசிக்க, அதனை இந்திய கத்தோலிக்க தேவாலயத் தலைவர் டெலஸ்போர் டாப்போ ஹிந்தியில் வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கத்தோலிக்க மதத்தின் பல முக்கியத் தலைவர்களும், ராணி மரியாவின் சகோதரி செல்மி, மரியாவை குத்திக் கொன்று தற்போது மனம் திருந்தியுள்ள சமுந்தர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கத்தோலிக்கர்களின் மிக உயரிய பட்டமான 'புனிதர்' பட்டத்துக்கு அடுத்த நிலையைச் சேர்ந்த அருளாளர் பட்டத்தை ராணி மரியாவுக்கு வாங்கித் தர இந்தூர் தேவாலயத் தலைவர் ஜார்ஜ் அனாதில் உள்பட பலர் பாடுபட்டனர்.
'சகோதரி ராணி' என்று அழைக்கப்பட்ட ராணி மரியா, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 55 முறை கத்தியால் குத்தப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் நிலமற்ற மக்களின் முன்னேற்றத்துக்காக சகோதரி ராணி பாடுபட்டு வந்ததால், அவர் மீது நிலச் சுவான்தார்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், கூலிப்படையைச் சேர்ந்த சமுந்தர் சிங், ஓடும் பேருந்தில் ராணியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில், சமுந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் நன்னடத்தை காரணமாக அந்தத் தண்டனை குறைக்கப்பட்டது.
அதையடுத்து சகோதரி ராணியின் வாழ்க்கைப் பயணத்தை இறையியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஆய்வு செய்வதற்காக, அப்போதைய இந்தூர் பிஷப் ஜார்ஜ் அனாதில், கடந்த 2001-இல் இரண்டு குழுக்களை நியமித்திருந்தார்.
அந்த இரு குழுக்களும் தங்களது ஆய்வறிக்கையை கடந்த 2005-ஆம் ஆண்டு சமர்ப்பித்தன. அதன்பிறகு, சகோதரி ராணியின் பெயர், வாடிகன் திருச்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
சகோதரி ராணி தொடர்பான தகவல்களை ஆய்வுசெய்த வாடிகன் திருச்சபைக் குழு, அவருக்கு 'அருளாளர்' என்ற பட்டம் வழங்குமாறு போப்புக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், சகோதரி ராணிக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படவுள்ளது என்று லியோ கார்னலியோ கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...