சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் நவ.23 வரை நீட்டிப்பு

இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரனின்
சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் நவ.23 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரனின் நீதிமன்றக் காவல் நவம்பர் 23- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல முறை சுகேஷ் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை விசாரணையின் போது நவம்பர் 9-ஆம் தேதி வரை சுகேஷின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை நவம்பர் 23-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய டி.டி.வி. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக தில்லி குற்றப் பிரிவு போலீஸார் குற்றப் பத்திரிகையை மூன்று மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். 
இந்த வழக்கில் தொடர்புடைய டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ், லலித் குமார் ஆகியோருக்கு எதிரான துணைக் குற்றப் பத்திரிகை தயாராகி வருவதாகவும், அவற்றை தாக்கல் செய்ய கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என்றும் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 
இதையடுத்து, கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தாமதம் குறித்த காரணத்தை நவம்பர் 9-ஆம் தேதி அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது வழக்கை விசாரித்து வரும் அதிகாரி சஞ்சய் ஷெராவத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கூடுதல் குற்றப் பத்திரிகையை டிசம்பர் 5-ஆம் தேதி தாக்கல் செய்யவும், அன்றைய தினம் வழக்கின் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com