தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தில்லியில் நவ.13 முதல் ஐந்து நாள்களுக்கு வாகனக் கட்டுப்பாடு திட்டம் அமல்

தில்லியில் நிலவிவரும் கடுமையான காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் நவம்பர் 13-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு தனியார் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (ஆட்-ஈவன்) அமல்படுத்த உள்ளதாக

News image
Updated On :9 நவம்பர் 2017, 8:52 pm

DIN

தில்லியில் நிலவிவரும் கடுமையான காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் நவம்பர் 13-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு தனியார் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (ஆட்-ஈவன்) அமல்படுத்த உள்ளதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இத்திட்டம் அமலில் உள்ள காலத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். 
தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை ஐந்து நாள்கள் அமல்படுத்த உள்ளதாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் வியாழக்கிழமை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
இத்திட்டம் நவம்பர் 13 முதல் ஐந்து நாள்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பெண்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
இந்த மாசுப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுவிக்க வேண்டும். இத்திட்டம் அமல்படுத்தப்படும் காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித போக்குவரத்துப் பிரச்னையும் ஏற்படாத வகையில் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 500 பேருந்துகளை வாடகைக்கு எடுக்குமாறு தில்லி போக்குவரத்து நிறுவனத்திற்கு (டிடிசி) உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்ட அமலாக்கத்தின் போது 100 சிற்றுந்துகளை வழங்க தில்லி மெட்ரோ நிர்வாகம் உறுதியளித்துள்ளது. பள்ளிகளும் தங்களது பேருந்துகளை தாங்களாக தந்து உதவிடலாம். ஆனால், கட்டாயப்படுத்தப்படமாட்டாது. இத்திட்டத்தில் சிஎன்ஜி வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
எனினும், அத்தகைய வாகனங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த ஸ்டிக்கர்கள் தில்லியின் 22 ஐஜிஎல் எரிவாயு விநியோக மையங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இருப்பில் இருக்கும். கடந்த முறை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலில் இருக்கும் போது வழங்கப்பட்ட ஸ்டிக்கர்கள் செல்லத்தக்கவை அல்ல என்றார்அவர். 
வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் அதற்கான ஒற்றை, இரட்டை இலக்க தேதிகளில் மாறி, மாறி இயக்க அனுமதிக்கப்படும். 2016-ஆம் ஆண்டில் இத்திட்டமானது ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரையும், ஏப்ரல் 15 முதல் 30-ஆம் தேதி வரையும் இரு முறை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.