

சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக தாற்காலிகமாக ஏற்பட்ட தேக்க நிலையில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அந்நாட்டு அமைச்சர்களையும்,முதலீட்டாளர்களையும் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து மோர்கன் ஸ்டான்லி நிதி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்திரக் கருத்தரங்கில் முதலீட்டாளர்களிடையே வியாழக்கிழமை உரை நிகழ்த்தினார். அப்போது ஜேட்லி பேசியது:
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய அளவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிகன்றன. இந்த அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் காகணமாக பொருளாதாரத்தில் தாற்காலிகமாக ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த நிலையானது தற்போது முடிவுக்கு வந்து விட்டது. தற்போது பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. அதேவேளையில் உலகப் பொருளாதாரமும் மேம்பட்டு வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருவதை நான் எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதைப் பொறுத்தவரை, எங்கள் பொருளாதராரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. பொருளாதாரம் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 முதல் 8 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை விரிவாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளுக்கு எங்களுக்கு உயர் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் அவசியமாகும்.
இந்தியாவில் வலுவான வங்கித்துறை உள்ளது என்பதை முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கிறேன். வருவான வரியை ஊக்கப்படுத்தும் திட்டத்தையும், வங்கிகளில் அரசு முதலீடு செய்யும் திட்டத்தையும் நாங்கள் அறிவித்துள்ளோம். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் வேகமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. அவை வங்கிகளின் திறனை மேம்படுத்துவதோடு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளின் ஆற்றலையும் அதிகரிக்கும். இந்த நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. அவை அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு இந்தியப் பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியை எட்ட உதவுகின்றன.
இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படும் எதிர்மறையான சூழல் தற்போது இல்லை. தொழிற்சங்கங்களையும் கலந்தாலோசித்து, தொழிலாளர் நலச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பங்கு விலக்கல் அல்லது தனியார்மயம் ஆகிய எந்த நடவடிக்கைக்கும் அண்மைக் காலத்தில் தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஏர் இந்தியா, எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து அவ்வாறே நீடிக்கும். எனினும், தனியார்மயமாக்கப்பட உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இது தொடர்பாக நீதி ஆயோக் அமைப்பு ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளது. பங்கு விலக்கல் திட்டத்தை நாங்கள் தீவிரமாகச் செயல்படுத்த உள்ளோம்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, முதலீட்டாளார்கள் அங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றார் ஜேட்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.