விருது பெற வந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கருப்புக் கொடி போராட்டம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் விருது வாங்குவதற்கு வந்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக, பாஜக தொண்டர்கள் கருப்புக் கொடி தாங்கி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது
விருது பெற வந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கருப்புக் கொடி போராட்டம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் விருது வாங்குவதற்கு வந்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக, பாஜக தொண்டர்கள் கருப்புக் கொடி தாங்கி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பெங்களூருவில் பிரபல பெண் பத்திரிக்கையாளர் கெளரி லிங்கேஷ் சமீபத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நடந்த கண்டனக் கூட்டமொன்றில் பீர்பால் நடிகர் பிராகாஷ் ராஜ் கலந்து  கொண்டார். அப்பொழுது பேசிய அவர் உத்தர பிரதேச மாநில முதல்வரும், பாஜகவினைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தினை கடுமையாக விமர்சித்து பேசினார். 

யோகி ஆதித்யநாத் ஒரு சிறந்த நடிகர் என்றும், அவரது நடிப்புக்காக சிறப்பு விருது அளிக்கலாம் என்றும் அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்திருந்தார். அப்பொழுது இவருக்கு பாஜகவினர் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் தற்பொழுது  பெங்களூருவிலிருந்து செயல்படும் ஒரு தனியார் அமைப்பின் சார்பாக பிராகாஷ் ராஜுக்கு 'சிவராம் காரந்த் விருது' வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கல்வி, இலக்கியம், பத்திரிக்கைத்துறை மற்றும் சுற்றுச் சூழல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இம்முறை பிரகாஷ் ராஜ் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதினை பெறுவதற்காக பெங்களூரு வந்த பிரகாஷ் ராஜுக்கு அம்மாநில பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டதில் கருப்புக் கொடிகளை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள் பிரகாஷ் ராஜுக்கு எதிராக குரல்களை எழுப்பினர். அத்துடன் ஆதித்ய நாத்துக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள்  வலியுறுத்தினார்கள். இறுதியில் போலீஸ் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினை கலைத்தது.

முன்னதாக  கர்நாடகாவினைச் சேர்ந்த மத்திய அமைச்சரான சதானந்த கவுடாவும்  நடிகர்  பிரகாஷ் ராஜினை கண்டித்து கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com