ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு தராததால் சுயேச்சையாக களமிறங்கப் போவதாக அந்த மாநில பாஜக மூத்த தலைவர் உத்தம் செளத்ரி அறிவித்துள்ளார்.
அதேபோன்று காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் சிலருக்கு எதிராக அக்கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசலப் பிரதேசத்துக்கு நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநில அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியானது முதல்கட்டமாக 59 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜகவைப் பொருத்தவரை அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இந்த சூழலில் மாநில பாஜக ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) பிரிவு தலைவராக இருக்கும் உத்தம் செளத்ரி, தமக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். கட்சிக்காக கடுமையாக உழைத்த தம்மை பாஜக தலைமை தொடர்ந்து புறக்கணிப்பதாகக் கூறிய அவர், காங்ரா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கான வேட்புமனுவை சனிக்கிழமை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, காங்ரா தொகுதியில் கடந்த முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பவண் காஜல், இம்முறை காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வேட்பாளரை மாற்றாவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அத்தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.