தமிழக பேரவையில் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய மனு: திரும்ப பெற உச்ச நீதிமன்றம் அனுமதி

தமிழக சட்டப்பேரவையில் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

தமிழக சட்டப்பேரவையில் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

தமிழக சட்டப் பேரவையில் நிகழாண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முன்வைத்த கோரிக்கையை பேரவைத் தலைவர் தனபால் நிராகரித்தார்.
இதை எதிர்த்து, பன்னீர் செல்வம் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறைகளையும், முடிவுகளையும் செல்லாது என அறிவிக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்றபோது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, "சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமையைப் பாதுகாக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இது தொடர்பாக தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உள்ளிட்ட சர்வதேச உதாரணங்களைக் கூற முடியும்' என்றார்.
அதற்கு மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், "அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 212- இன்படி, சட்டப்பேரவை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க இரு வாரங்கள் அவகாசம் வேண்டும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய முடியும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் எடுக்கும் முடிவுகளை நீதிமன்ற ஆய்வுக்கு உள்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இந்த வழக்கு தொடர்பான மனுவின் நகலை தமிழக அரசின் வழக்குரைஞருக்கு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கை செப். 21-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இணைப்பு: இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகியும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவித்தனர்.
இரு அணிகளும் இணைவது தொடர்பான புதிய ஏற்பாட்டின்படி தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நீடிப்பார். துணைமுதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி வகிப்பார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் ஆளுங்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முறையீடு: இந்நிலையில், மாஃபா பாண்டியராஜன் வழக்குரைஞர் சுனில் ஃபெர்னாண்டஸ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் திங்கள்கிழமை ஆஜராகி, "இரு அணிகளுக்கும் இடையே இருந்த பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதால், இணைந்துவிட்டன. எனவே, தமிழக சட்டப் பேரவையில் புதிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, இது தொடர்பான மனுவை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com