வளர்ச்சிதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு

வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம்தான் நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாராணசியில் வெள்ளிக்கிழமை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
வாராணசியில் வெள்ளிக்கிழமை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.

வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம்தான் நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது சொந்த தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் இரு நாள் சுற்றுப் பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிய பிரதமர் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். வாராணசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் நின்றுவிடாமல், அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி வைப்பதையும் மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. முந்தைய அரசுகள் தேர்தல்களில் வெற்றி பெறுவதையும், அதற்காக மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதையும்தான் நோக்கமாகக் கொண்டிருந்தன. அவர்கள் வளர்ச்சிப் பணிகள் எதையும் முறையாக மேற்கொண்டதில்லை. தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு திட்டங்களை அறிவித்து வந்தனர்.
ஏழைகளின் வாழ்வில் ஒளி: ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம்தான் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். இப்போது ஏழையாக இருக்கும் யாரும், தங்கள் அடுத்த தலைமுறையும் ஏழையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதில்லை. அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மத்திய அரசு பணியாற்றி வருகிறது. வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம்தான் நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியும். நமது நாட்டை பொருளாதார ரீதியாக முதலிடத்துக்குக் கொண்டு செல்வதுதான் மத்திய அரசின் கனவு. 
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க...: நமது விவசாயிகளின் விளைபொருள்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அப்போதுதான் விவசாயிகளின் வருவாய் அதிகரித்து, அவர்கள் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும். நாட்டில் சாலை, நீர் வழிப் பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
ஆதித்யநாத்துக்கு புகழாரம்: உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகின்றன. இந்த 6 மாதங்களில் அவர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.
பிரதமரின் வழிகாட்டல்: இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள், இளைஞர்கள், கிராமப்புற மக்களின் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது' என்றார்.
புதிய ரயில்: குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து வாராணசி புறப்பட்ட மஹாமனா எக்ஸ்பிரஸ் ரயிலை வாராணசியில் இருந்து காணொலி முறையில் மோடி தொடங்கி வைத்தார். அதே நேரத்தில், வதோதராவில் நடைபெற்ற புதிய ரயில் தொடக்க நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வதோதரா, வாராணாசி இரு தொகுதிகளிலும் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
ரூ.300 கோடியில் விற்பனை மையம்: முன்னதாக, வாராணசியில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருள், கலைப் பொருள்கள் கண்காட்சி, விற்பனை மையத்தை மோடி திறந்து வைத்தார். அங்கு கிராமப்புற கைவினைக் கலைஞர்களால், மரம், கண்ணாடி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நீர் வழி ஆம்புலன்ஸ்: சிறு தொழில்கள், சிறு விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள உத்கர்ஷ் வங்கியின் தலைமையகம் அமைப்பதற்கான அடிக்கல்லை மோடி நாட்டினார். வாராணசியில், அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை படகு மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நீர் வழி ஆம்புலன்ஸ் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
வெற்றிக்குப் பின் முதல் பயணம்: பயணத்தின் 2-ஆவது நாளான சனிக்கிழமையும் வாராணசி தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க இருக்கிறார். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு இப்போதுதான் முதல் முறையாக மோடி அந்த மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com