சுடச்சுட

  
  ponradhakrishnan

  தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோர மைல் கல்லில் ஊர் பெயரை ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுடன் ஹிந்தி மொழியிலும் சேர்த்து எழுத நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று மத்திய நெடுஞ்சாலை, சாலை போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
  இது குறித்து அவர் அளித்த விளக்கம் "யூ-டியூப்' சமூக ஊடகம் மூலம் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது வருமாறு:
  தற்போது தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்லில் ஹிந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள சாலைகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் செல்லும் போது, ஊரின் பெயர்களை அவர்களும் அறிய வசதியாக தமிழ், ஆங்கிலம், ஆகியவற்றுடன் ஹிந்தி மொழியிலும் மைல் கல்லில் ஊர் பெயரை இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற முடிவு 2004-இல் எடுக்கப்பட்டது.
  காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது, அக்கட்சியைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2004, டிசம்பர் 24; 2006, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் இது தொடர்பான வழிகாட்டுதல்களுக்குரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  ஆனால், இந்த உண்மையை மறைத்து தற்போதுள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசுதான் ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாக திமுக குற்றம்சாட்டுவது ஏன்?
  ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியும் தமிழர்கள் மீது திணிக்கப்படாது என உறுதியாக என்னால் கூற முடியும். எப்போதெல்லாம் திமுக தோல்வியைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஜாதி, மதம், மொழி, அரசியலை கையில் எடுத்து பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai