சுடச்சுட

  

  பாபர் மசூதி இடிப்பு: அத்வானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பரிசீலிப்போம்

  By DIN  |   Published on : 07th March 2017 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு எதிரான சதி தொடர்பான குற்றச்சாட்டுகளை மீண்டும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ஹிந்துக் கடவுளான ராமர் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ரேபரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தவிர, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு லக்னௌவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  இதனிடையே, மசூதி இடிக்கப்பட்டதில் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து தொழில்நுட்பக் காரணங்களுக்காக அத்வானி உள்ளிட்ட 13 பேர் சில ஆண்டுகளுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஹாஜி மஹபூப் அகமது (தற்போது உயிருடன் இல்லை) என்பவரும், சிபிஐ அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
  இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.சி.கோஸ், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ’தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் விடுவிக்கப்பட்டதை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்கிறோம். பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஏன் விசாரிக்கக் கூடாது?' என்று தெரிவித்தனர்.
  எனினும், இரண்டு வழக்குகளிலும் வெவ்வேறு நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு வழக்குகளும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. எனவே அவற்றை இணைத்து விசாரிக்கக் கூடாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai