சுடச்சுட

    

    அயோத்தி பிரச்னைக்கு சமரசத் தீர்வு: உச்ச நீதிமன்றம் யோசனை

    By DIN  |   Published on : 22nd March 2017 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ayothi

    அயோத்தி பிரச்னை பதற்றம் நிறைந்ததுடன், உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துபேசி சுமுகத் தீர்வு காண, புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கில் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால் சமரசப் பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர்களை நியமிக்கத் தயார் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்திவிட்டு, வரும் 31-ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்குமாறும் சுவாமியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி- பாபர் மசூதி பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே நீண்டகாலமாக பிரச்சனை நீடித்து வருகிறது. இதனிடையே, சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்த, பாபர் மசூதி என்று அழைக்கப்பட்ட கட்டடம் 1992-இல் கரசேவகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இடிக்கப்பட்டது. இந்நிலையில், தகராறுக்கு உட்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை, அதற்கு உரிமை கொண்டாடும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் நிர்மோஹி அகாரா என்ற ஹிந்து மடம் ஆகிய மூன்று தரப்பினருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்க அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
    இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அயோத்தியில் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
    இதனை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு, அயோத்தி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளில் அவரையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில், டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னர் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: ’’அயோத்தி விவகாரமானது மதங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும். இத்தகைய பிரச்னைகளில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்துபேசி, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர ஒருமித்த அடிப்படையில் சுமுகத் தீர்வு காணவேண்டும். ஆகையால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து, சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
    இந்நிலையில் குறுக்கிட்ட சுப்பிரமணியன் சுவாமி, சுமுகப் பேச்சுவார்த்தை தொடர்பாக முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளைத் தாம் அணுகியதாகவும், ஆனால் இப் பிரச்னைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தின் தலையீடு அவசியம் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகவும் கூறினார்.
    இதனைக் கேட்ட பின்னர் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் கூறியதாவது: ’’ஒருமித்த முறையில் சுமுகத் தீர்வு காண்பதற்காக நீங்கள் (சுப்பிரமணியன் சுவாமி) மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இதற்கு ஒரு சமரசத் தீர்வாளரை வைத்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட தரப்பினர் விரும்பினால், இரு தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் கொண்ட குழுவுக்கு நான் தலைமை தாங்கத் தயார். இல்லையேல், வேறு ஓர் உச்ச நீதிமன்ற நீதிபதியை தலைமை மத்தியஸ்தராக நியமிக்கவும் தயார்'' என்று அவர் கூறினார்.
    இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி, வரும் 31-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்திடம் சுப்பிரமணியன் சுவாமி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கேஹர் கேட்டுக்கொண்டார்.

    அயோத்தி விவகாரமானது மதங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும். இத்தகைய பிரச்னைகளில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்துபேசி, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர ஒருமித்த அடிப்படையில் சுமுகத் தீர்வு காணவேண்டும். ஆகையால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து, சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
    - நீதிபதிகள்

    இதற்கு முன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகளால் சீர்குலைக்கப்பட்டது.
    - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மெளலானா காலித் ரஸீத்

    சுமுகப் பேச்சுவார்த்தையின் மூலம் ராமர் அவதரித்த இடத்தில் (ராம ஜென்மபூமியில்) ராமர் ஆலயம் எழுப்பப்படும், அதேநேரத்தில் சரயூ நதியின் மறுகரையில் பாபர் மசூதி கட்டப்படும்.


    - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

    அயோத்தியில் அந்த இடத்தில்தான் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும். அந்த இடத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அதை ராமருக்கு பரிசாக அளிக்க வேண்டும். இதை விட வேறு பெரிய பரிசு இருக்க முடியாது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் வகையில், இந்தப் பிரச்னைக்கு நாங்கள் தீர்வு காண்போம்.
    - பாஜக மூத்த தலைவர் உமா பாரதி

    நீதிமன்றம் தெரிவித்த யோசனை படி, அயோத்தி பிரச்னையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும்.
    - காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா

    அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளது.
    - மத்திய அமைச்சர் பி.பி. சௌதரி

    உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கக்கூடியது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, அனைத்து தரப்பினரும் கலந்து பேசி ஒருமித்த முடிவை எட்டுவார்கள் என்றும், ராமர் கோயில் பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள் என்றும் நம்புகிறேன்.
    - பாஜக மூத்தத் தலைவர் அத்வானி

    அயோத்தி பிரச்னையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துபேசி சுமுகத் தீர்வு காண வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக பேச்சு நடத்த இரு தரப்பினரையும் நான் வரவேற்கிறேன். பிரச்னை குறித்து அமர்ந்து பேசி சுமுகத் தீர்வுகாண வேண்டும். இந்த விஷயத்தில் உத்தரப் பிரதேச அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.


    - உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

    இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பரஸ்பரம் ஏற்கக்கூடிய வகையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால், நீண்டகால அமைதி, நல்லெண்ணம், பரஸ்பர மரியாதை, சகோதரத்துவம் நிலவுவது உறுதிப்படுத்தப்படும். இல்லையெனில், நியாயங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளிக்க வேண்டும்.
    - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா

    சர்ச்சைக்குரிய இடம், ராமருக்குச் சொந்தமானது; அங்கு மிகப்பெரிய ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் மாற்றமில்லை; ராமர் பிறந்த அந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டும் வகையில் மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும்.
    - விஹெச்பி தலைவர் பிரவீண் தொகாடியா

    ராம ஜென்பூமி இயக்கத்தை வழிநடத்திய துறவியர் பேரவைதான் பேச்சுவார்த்தை குறித்து முடிவெடுக்கும். இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். முடிவெடுக்காது. துறவியர் பேரவையின் முடிவை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும். அதேநேரத்தில் பேச்சுவார்த்தை மூலமோ அல்லது புதிய சட்டத்தைக் கொண்டுவந்தோ எவ்வழியிலேனும் அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பம். இப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டு, அனைத்து இந்தியர்களின் ஒத்துழைப்புடன் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்று நம்புகிறோம்.
    - ஆர்.எஸ்.எஸ். துணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபோலே

    உச்ச நீதிமன்றக் கருத்தின்படி, பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். அதேநேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே இந்த சமரசப் பேச்சுவார்த்தை நடைபெறக் கூடாது, நீதிபதிகள் முன்னிலையில்தான் நடைபெறவேண்டும். இருப்பினும் இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்பதே உண்மை.
    - பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜாஃபர்யப் கிலானி

    பாபர் மசூதி தொடர்பான வழக்கில், குறிப்பிட்ட பகுதி யாருக்குச் சொந்தம் என்பது குறித்துதான் வழக்கே தொடுக்கப்பட்டது. ஆனால் அதுபற்றித் தெரிவிக்காமல், கூட்டாளிகள் பிரச்னை என்பதுபோல அலாகாபாத் உயர் நீதிமன்றம் தவறான தீர்ப்பைத் தந்துவிட்டது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், அத்வானி, ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது சதிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படுமா என்பதை அறிய காத்திருக்கிறேன். இதேபோல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் நல்ல முடிவெடுக்கும் என்றும் நம்புகிறேன்.


    - முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai