Enable Javscript for better performance
ஆழ்கடல் மீன் பிடித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்: தமிழக மீனவ பிரதிநிதிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் உ- Dinamani

சுடச்சுட

  

  ஆழ்கடல் மீன் பிடித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்: தமிழக மீனவ பிரதிநிதிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

  Published on : 22nd March 2017 12:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pon-radhakrishnan

  தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். உடன் எம்.பி.க்கள் அன்வர் ராஜா,

  ஆழ்கடல் மீன் பிடிப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிரதிநிதிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.
  இந்திய கடல் எல்லைப் பகுதி அருகே கடந்த 6-ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். மற்றொரு மீனவர் செரோன் காயமடைந்தார். இதையடுத்து, இலங்கைக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீனவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
  பிரதிநிதிகள் வருகை: இந்நிலையில், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சங்கத் தலைவர்கள் யு.அருளானந்தம், ஏ.அல்போன்ஸ், வி.பி.ஜேசுராஜா, என்.தேவதாஸ், ஏ.சைமன், சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உறவினர் ஜஸ்டின் உள்பட 10 பேர் தில்லிக்கு திங்கள்கிழமை இரவு வந்தனர். அவர்கள் தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.அன்வர்ராஜா, மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
  சுஷ்மா உறுதி: இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கூறியதாவது:
  மீனவர்களின் கோரிக்கையை பரிசீலித்த சுஷ்மா ஸ்வராஜ், தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ இறப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள இந்திய மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் இலங்கைக்கு செல்வதற்கு முன்பாகவே விடுவிக்க வலியுறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  மத்திய, தமிழக அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்தை ரூ.1,500 கோடியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.750 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.100 கோடி மத்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் பணிகள் தொடங்கி விட்டன. மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார் என்றனர்.
  மீனவர்கள் கோரிக்கை: மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் யு.அருளானந்தம், என்.தேவதாஸ் ஆகியோர் கூறுகையில், ’மீனவர் பிரிட்ஜோ மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்; இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்; இந்திய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் நிரந்தரமாக மீன்பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கேட்டுக் கொண்டோம். இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாக சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai