சுடச்சுட

  

  உ.பி.யில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? பாஜகவுக்கு மாயாவதி சவால்

  By DIN  |   Published on : 22nd March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MAYA

  மாநிலங்களவையில் செவ்வாய்கிழமை பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

  ’உத்தரப் பிரதேசத்தில் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தலை நடத்தத் தயாரா?' என்று பாஜகவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சவால் விடுத்துள்ளார்.
  இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை பேசியதாவது:
  உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் நடைபெற்ற பேரவைத் தேர்தல் முடிவுகள், உண்மையான மக்கள் தீர்ப்பு அல்ல. அது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் தீர்ப்பே ஆகும்.
  இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்புவதற்காக, விதி எண்.267-இன் கீழ் அவை அலுவலை நிறுத்தி வைக்கக் கோரும் அறிக்கை எங்களது கட்சி சார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்ப்பட்டுள்ளது.
  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சந்தேகம் எழுப்பினர். அத்தகைய இயந்திரங்கள் மூலம் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த முடியாது என்று அவர்கள் கூறினர்.
  ஆனால், தற்போது அவர்களே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்கள். உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் முறைகேடாக மாற்றம் செய்யப்பட்ட, அல்லது பழுதுபட்ட பல மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பாஜகவுக்கு மாறி விழுந்தன.
  அவ்வாறு நடக்கவில்லை, தங்களுக்குக் கிடைத்த வாக்குகள் அனைத்தும் மக்களே விரும்பி அளித்ததுதான் என்று பாஜகவினர் உண்மையிலேயே நம்பினால், வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தலை சந்திக்கத் தயாரா? என்று அவர் சவால் விடுத்தார்.
  இதற்குப் பதிலளித்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ’’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் நேர்மையான தேர்தலை நடத்தியதாக இந்திய தேர்தல் ஆணையத்தை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. அந்த இயந்திரங்கள், தொழில்நுட்பரீதியில் மிகவும் துல்லியமாகச் செயல்படுபவை'' என்றார்.
  கோவா ஆளுநருக்கு எதிரான மனு: இதற்கிடையே, கோவாவில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸை ஆட்சியமைக்க அழைக்காமல், பாஜகவுக்கு அழைப்பு விடுத்ததன்மூலம் அந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா அதிகார துஷ்பிரயோகம் செய்தது குறித்து விவாதிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சார்பில், விதி எண் 267-இன்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, தீவிரமாக பரிசீலித்து வருவதாக அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தெரிவித்தார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai