அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

இன்று தென்மாநில நிதியமைச்சர்கள் கூட்டம்: வரிப் பகிர்வு திட்டத்தை எதிர்க்க முடிவு

தென் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது

Updated On :9 ஏப்ரல் 2018, 7:39 pm

தென் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-ஆவது நிதிக் குழுவின் வரைவுத் திட்டங்கள் குறித்து அக்கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
இதில் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இக்கூட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். நாட்டின் வருவாய் ஆதாரங்கள், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான வரிப் பகிர்வுகள் உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஐந்தாண்டுக்கு ஒரு முறை நிதிக் குழு அமைக்கப்படும். மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்த வரைவுக் கொள்கைகளையும் அக்குழு வகுக்கும்.
இந்நிலையில், 14-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரைகள் வரும் 2020-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளன. அதைக் கருத்தில்கொண்டு, 15-ஆவது நிதிக் குழுவை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைத்தது. அக்குழு குழு அளிக்கும் பரிந்துரைகளானது வரும் 2020-இல் இருந்து 2025-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கான வரி வருவாயைப் பகிர்ந்தளிக்க புதிய நிதிக் குழு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள அரசு, அதுகுறித்து விவாதிக்க தென் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அதன்படி, அக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
வரி வருவாய் சார்ந்த விஷயங்களில் தென்னிந்திய மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை கேரளம் முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: புதிய நிதிக் குழுவின் வரைவுத் திட்டங்கள் அனைத்தும் தென் மாநிலங்களின் நலனுக்கு எதிரானவை. அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்பட்டால் கடுமையான பாதிப்பை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை 1971-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அதன் காரணமாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மக்கள் தொகை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. 
இத்தகைய நிலையில், மக்கள் தொகையின் அடிப்படையில் வரிப் பகிர்வு அளிக்கப்படும் எனத் திட்டமிடுவது ஏற்புடையதல்ல என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.