ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்யப்பட்டது 'வெட்கக்கேடான நிகழ்வு' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது சமூகத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கக்ரியாவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைகழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
குழந்தைகளின் புன்னகைதான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயம் என நான் கருதுகிறேன். குழந்தைகள், தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று உணரும் வகையில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்த சமூகத்தின் மிகப் பெரிய வெற்றி. அதுதான் இந்த சமூகத்தின் முதல் கடமையாகும்.
அண்மையில் ஒரு குழந்தை (கதுவா) மிகக் கொடுமையான, காட்டுமிராண்டித்தநமான குற்றத்துக்கு ஆளாகியிருக்கிறது. யாராலும் அதை கற்பனைகூட செய்ய முடியாது.
நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்தும்கூட இதுபோன்ற சம்பவங்கள் நிகழுகின்றன என்பது வெட்கக்கேடாகும். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம், என்ன மாதிரியான சமூகத்தை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம், எதிர்கால சந்ததியினருக்கு நாம் எதை சொல்ல போகிறோம் என்பதையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நமது தாய், சகோதரிகள், மகள்கள் ஆகியோருக்கு சமஉரிமை,
நீதி, சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் சமூகத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா?
நாடெங்கிலும் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமையாகும் என்றார் அவர்.
மெஹபூபா கண்டனம்: இவ்விழாவில், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்ஃதி பேசுகையில், கதுவா சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளித்ததாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் இப்பகுதியில் (ஜம்மு) நடைபெறும் வழிபாடுகள் அனைத்தும் 'கன்னி பூஜை' என்ற பெயரிலேயே நடத்தப்படுகிறது. சிறுமிகளை 'துர்கை' அம்மனாக வழிபடுகின்றனர். அந்த தாயின் மண்ணில் இப்படிப்பட்ட கொடூரத்தை அவர்கள் அரங்கேற்றியது எப்படி? என்றார் மெஹபூபா.
முன்னதாக, கக்ரியால் பகுதியில் உள்ள தொழில்நுட்ப மைய விமான நிலையத்தில் வந்திறங்கிய ராம்நாத் கோவிந்தை, ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் மெஹபூபா முப்ஃதி, துணை முதல்வர் நிர்மல் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!







