அம்பேத்கரும், மோடியும் பிராமணர்கள்; கிருஷ்ண பகவான் ஓபிசி: குஜராத் பேரவைத் தலைவர் பேச்சால் சர்ச்சை

அம்பேத்கரும், நரேந்திர மோடியும் பிராமணர்கள்; கிருஷ்ண பகவான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓபிசி) சேர்ந்தவர் என்று குஜராத் மாநில சட்டப் பேரவை தலைவர் ராஜேந்திர திரிவேதி பேசியது
அம்பேத்கரும், மோடியும் பிராமணர்கள்; கிருஷ்ண பகவான் ஓபிசி: குஜராத் பேரவைத் தலைவர் பேச்சால் சர்ச்சை
Updated on
1 min read

அம்பேத்கரும், நரேந்திர மோடியும் பிராமணர்கள்; கிருஷ்ண பகவான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓபிசி) சேர்ந்தவர் என்று குஜராத் மாநில சட்டப் பேரவை தலைவர் ராஜேந்திர திரிவேதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவரான ராஜேந்திர திரிவேதி, குஜராத்தில் முந்தைய பாஜக அரசில் விளையாட்டு மற்றும் ஆன்மிக சுற்றுலா மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். காந்திநகரில் பிராமண வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக பேசியதாவது:
அம்பேத்கர், ஒரு பிராமணர் என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அம்பேத்கர் என்ற அவரது கடைசிப் பெயர், பிராமணர்களின் பெயர். அவரது ஆசிரியரான ஒரு பிராமணர்தான் அம்பேத்கருக்கு அந்தப் பெயரைச் சூட்டினார். கல்வியில் சிறந்தவர்களை பிராமணர்கள் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு பிராமணர்தான்.
அதே போல கிருஷ்ண பகவான், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கோகுலத்தில் மாடு மேய்த்த அவரைக் கடவுளாக்கியது யார்? பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு ரிஷிதான்.
ராமபிரான் சத்ரிய குலத்தைச் சேர்ந்தவர். பெரிய ரிஷிக்களால்தான் அவர்கள் கடவுளாக உருவெடுத்தார்கள். பதவி ஆசையும், அதிகார வேட்கையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை பிராமண சமுகத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சந்திரகுப்த மெளரியர் போன்ற மிகப்பெரிய மன்னர்களை பின்னால் இருந்து உருவாக்கியவர்கள் பிராமணர்கள்தான். பிராமணர்கள்தான் பல கடவுள்களையும் உருவாக்கினர் என்று பேசினார். மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ராஜேந்திர திரிவேதியின் கருத்தை ஆதரித்துப் பேசிய விஜய் ரூபானி, 'பெரிய ரிஷிக்கள் அனைவருமே பிராமணர்கள்தான். ராஜேந்திர திரிவேதி கூறுவது சரியானது' என்றார்.
தொடர்ந்து தனது பேச்சு குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த ராஜேந்திர திரிவேதி, 'ஜாதி என்பது ஒருவரது செயல்களால்தான் முடிவு செய்யப்படுகிறது. பிறப்பால் அல்ல என்று பகவத் கீதை கூறுகிறது. எனவே, கீதையின் படி நன்கு படித்த பண்பாளர்கள் அனைவரும் பிராமணர்கள்தான்' என்றார்.
ராஜேந்திர திரிவேதியின் இந்தக் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், அதனை மீறி பாஜக தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com