சீனப் பயணத்தில் முக்கிய பிரச்னைகளை தவிர்த்த மோடி: சிவசேனை தாக்கு
சீனப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்குடன் இருதரப்பு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார் என்று சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


சீனப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்குடன் இருதரப்பு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார் என்று சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மத்தியிலும் மகாராஷ்டிர மாநிலத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை கட்சி, அண்மைக் காலமாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வருகிறது.
இந்நிலையில், மோடி அண்மையில் மேற்கொண்ட சீனப் பயணத்தை முன்வைத்து, சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் திங்கள்கிழமை வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
சீனாவுடனான பிரச்னைகளை தீர்ப்பதில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 'பஞ்சசீல' கொள்கைகளையே தற்போதைய பிரதமரும் முன்னெடுப்பது போல தோன்றுகிறது. சீனாவுடான நேருவின் நட்புறவால், இந்தியாவுக்கு தீமையே மிஞ்சியது. நேருவை சாடுவதற்கு எந்த வாய்ப்பையும் தவறவிடாத மோடி, சீனாவுடன் நேருவை போன்ற அணுகுமுறையை கடைப்பிடிப்பது ஏன்?
மோடியின் 2 நாள் சீனப் பயணம் எவ்வித திட்டமிடலும் இல்லாதது என்று வெளியுறவு அமைச்ககம் தெரிவித்தது. அப்படியென்றால், அவருக்கு இங்கு பணிகள் எதுவும் இல்லை; ஓய்வெடுக்கும் நோக்கில் சீனா சென்றுள்ளார் என்றுதான் அர்த்தமாகும்.
உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், சீனா மட்டும் அந்த நாட்டுக்கு உதவி செய்து வருகிறது. இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். பாகிஸ்தான் மட்டுமன்றி, நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, வங்கதேசம், மியான்மர் ஆகிய இந்தியாவின் இதர அண்டை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த சீனா முயலுகிறது.
டோக்கா லாம் பகுதியில் சீனா கடந்த ஆண்டு தனது படைகளை குவித்தபோது, மத்திய பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து சீன அதிபருடன் மோடி பேசாதது ஏன்?
அருணாசலப் பிரதேச எல்லையில் சீனப் படையினர் அடிக்கடி ஊடுருவும் பகுதியில் சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. சீனாவின் பொருளாதார வழித்தட திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இந்த விவகாரங்களை சீன தரப்பிடம் மோடி எழுப்பாதது ஏன்?
சீனப் பயணத்தின்போது பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புக் கொண்ட மோடி, பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாதது ஏன்? எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து சீன அதிபருடன் மோடி பேசியுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எல்லை பிரச்னை ஏதும் ஏற்படுவதை அவர் விரும்பவில்லை என்று சிவசேனை கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...