ரூ.40,000 கோடியில் 'டிரயம்ப்' ஏவுகணைகளை வாங்க ரஷியாவுடன் விரைவில் ஒப்பந்தம்

ரஷியாவிடம் இருந்து ரூ.40,000 கோடியில் எஸ்-400 டிரயம்ப் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.
Updated on
1 min read

ரஷியாவிடம் இருந்து ரூ.40,000 கோடியில் எஸ்-400 டிரயம்ப் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்தியா-ரஷியா இடையே வரும் அக்டோபர் மாதம் ஆண்டு மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்துப் பேச இருக்கின்றனர். இந்த சந்திப்புக்கு முன்பே இந்த ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயம் உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இந்தியா-சீனா இடையிலான 4,000 கி.மீ. எல்லைப் பாதுகாப்புக்காக நீண்ட தொலைவு சென்று வான் இலக்குகளைத் தாக்கும் வகையில் ஏவுகணைகளை வாங்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. எஸ்-400 டிரயம்ப் ஏவுகணைகள் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை.
இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா முயற்சிப்பதற்கு முன்பே ரஷியாவிடம் இருந்து சீனா இந்த நவீன ஏவுகணைகளை வாங்கிவிட்டது. 
ஆனால், எத்தனை ஏவுகணைகளை சீனா வாங்கியுள்ளது என்பது ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்தியத் தரப்பு முதல் கட்டமாக 5 எஸ்-400 டிரயம்ப் ஏவுகணைகளை வாங்க முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பேச்சு நடத்தப்பட்டு வந்தது. இப்போது, ஒப்பந்தம் மேற்கொள்ளும் அளவுக்கு பேச்சுவார்த்தை மேம்பட்டுள்ளது. டிரயம்ப் ஏவுகணைகளுடன் ஏவுவாகனங்களையும் ரஷியா அளிக்கும். அதில் இருந்து 3 வகையான ஏவுகணைகளை செலுத்த முடியும். மேலும், எதிரிநாட்டு விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை 400 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் வழிமறித்து அழிக்கும் வல்லமை உடையது.
முன்னதாக, ரஷியாவுடன் இந்தியா மேற்கொள்ளும் இந்த ஏவுகணை ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. ஏனெனில், ரஷியாவுடன் ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் பிற நாடுகளுக்கு, அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கும் வகையில், சட்டமும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கவுள்ள இந்தியா மீதும், அமெரிக்கா தடை விதிக்க நேரிடும். ஆனால், இது அமெரிக்க பாதுகாப்புத் துறை வர்த்தக நலனுக்கு பாதகமாக அமையும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டீஸ் அண்மையில் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com