வாக்கு தவறிவிட்டார் பிரதமர்!: சந்திரபாபு நாயுடு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மக்களிடம் அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி காப்பாற்றவில்லை என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்
வாக்கு தவறிவிட்டார் பிரதமர்!: சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read


ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மக்களிடம் அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி காப்பாற்றவில்லை என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் பாஜகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் கூட்டு சதியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரத்தின் நலன்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது அந்த மாநிலக் கட்சிகளின் வாதம். அதன் தொடர்ச்சியாகவே சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை அக்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் திருப்பதியில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். முன்னதாக, போராட்டத்தின்போது கடந்த மக்களவைத் தேர்தல் காலத்தில் பிரதமர் மோடி திருப்பதியில் மேற்கொண்ட பிரசாரம் பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டது. பாஜகவுக்கு வாக்களித்தால் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக அவர் வாக்குறுதி அளித்த காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
புனித தலமான திருப்பதி மண்ணில் ஆந்திர மக்களிடம் சிறப்பு அந்தஸ்து தொடர்பான வாக்குறுதியை பிரதமர் மோடி அளித்தார். ஆனால், அதன் பிறகு அதை அவர் மறந்துவிட்டார். இதுதொடர்பாக 29 முறை தில்லிக்குச் சென்று பிரதமரிடம் பேசினேன். ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து ஆந்திர மக்களின் அடிப்படை உரிமை. இந்த விவகாரத்தில் பாஜகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் கூட்டு சதியில் ஈடுபட்டு வருகின்றன என்றார் அவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்னிறுத்தி தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற அலுவல்களை முற்றிலுமாக முடக்கினர். பின்னர், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச அமைச்சர்கள் இருவர் ராஜிநாமா செய்ததும், அதன் தொடர்ச்சியாக ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்ததும் நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com