காஷ்மீர் புதிய துணை முதல்வர் கவிந்தர் குப்தா: 7 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக, அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர் கவிந்தர் குப்தா திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் 7 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக, அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர் கவிந்தர் குப்தா திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் 7 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் இருந்து வந்தார்.
இதனிடையே, கதுவா சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக அண்மையில் நடைபெற்ற பேரணியில் பாஜகவைச் சேர்ந்த லால் சிங், சந்தர் பிரகாஷ் ஆகிய அமைச்சர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியதால், இருவரும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் பாஜக சார்பில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, துணை முதல்வராக இருந்த நிர்மல் சிங், தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா கடிதத்தையும், பாஜகவைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் பாலி பகத், சுற்றுலாத் துறை இணையமைச்சர் பிரியா சேதி ஆகியோரின் ராஜிநாமா கடிதங்களையும் ஆளுநர் என்.என்.வோரா ஏற்றுக் கொண்டார். இவர்களுடன், சட்டத் துறை அமைச்சர் அப்துல் ஹக் கானின் ராஜிநாமாவும் ஏற்கப்பட்டது.
இந்நிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி ஜம்முவில் திங்கள்கிழமை நடைபெற்றது. கோடை காலத்தையொட்டி, மாநில தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலக செயல்பாடுகள் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஜம்முவில் ஆளுநர் மாளிகைக்கு பதிலாக வேறொரு கூட்ட அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், புதிய துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்தவரும் பேரவைத் தலைவருமான கவிந்தர் குப்தா பதவியேற்றார். அதேபோல், மாநில பாஜக தலைவர் சத்பால் சர்மா, கதுவா பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜீவ் ஜஸ்ரோடியா, சம்பா தொகுதி பாஜக எம்எல்ஏ தேவிந்தர் குமார் மன்யால் , மற்றொரு பாஜக எம்எல்ஏ சக்தி ராஜ் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்கள் அனைவருமே புதுமுகங்களாவர்.
இதேபோல், போக்குவரத்து துறை இணையமைச்சராக இருந்த சுனில் சர்மா, கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்கள் முகமது கலீல் (புல்வாமா தொகுதி), முகமது அஷ்ரஃப் (சோன்வார்) ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு பதவி பிரமாணத்தையும் ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் என்.என்.வோரா செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், முதல்வர் மெஹபூபா முப்ஃதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்மல் சிங்குக்கு பேரவைத் தலைவர் பதவி? இதனிடையே, துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நிர்மல் சிங், சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
பதவியேற்ற சில மணி நேரத்தில் சர்ச்சை கருத்து
துணை முதல்வராக பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு கவிந்தர் குப்தா பேட்டியளித்தார். அப்போது, கதுவா சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 'அதுவொரு சிறிய சம்பவம்; அதனை இத்தனை பரபரப்பாக்கியது தேவையில்லாதது. மாநிலத்தில் வேறு பிரச்னைகளும் பெரிய சவால்களும் உள்ளன. எனினும் அதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதை உறுதி செய்வோம்' என்றார்.
துணை முதல்வராக பதவியேற்ற சில மணி நேரத்தில் இதுபோன்ற கருத்தை கவிந்தர் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியானது, எனக்கு மிகப் பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது. காஷ்மீர் மக்களுக்காகவும் மாநில நலன்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன். காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சமமான நீதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய முன்னுரிமை அளிப்பேன்' என்றார்.
தனது 13 வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தவரான கவிந்தர் குப்தா (58), அவசர நிலை பிரகடன காலக்கட்டத்தில் 13 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தவர். ஜம்முவின் மேயராக கடந்த 2005 முதல் 2010 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தவர். காஷ்மீர் மாநில பாஜகவின் பொதுச் செயலராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...