கைகள் இல்லாமல் பிறந்த சிறுவன்தான்; ஆனால் தலையெழுத்தை மாற்றும் திறமைசாலி

நமக்கு தன்னம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால் உடலில் ஏற்படும் எந்த குறைபாடும், வாழ்க்கையில் பெரிய தடைக்கற்களை ஏற்படுத்திவிட முடியாது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் மொஹம்மது ஆசிம்.
கைகள் இல்லாமல் பிறந்த சிறுவன்தான்; ஆனால் தலையெழுத்தை மாற்றும் திறமைசாலி
Updated on
1 min read


கோழிக்கோடு: நமக்கு தன்னம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால் உடலில் ஏற்படும் எந்த குறைபாடும், வாழ்க்கையில் பெரிய தடைக்கற்களை ஏற்படுத்திவிட முடியாது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் மொஹம்மது ஆசிம்.

12 வயதாகும் இந்த சிறுவன் பிறக்கும் போதே கைகள் இல்லாமல் பிறந்தவன். 90 சதவீத மாற்றுத் திறனாளியான சிறுவன் பள்ளிக்குச் செல்வதை எந்த ஊனத்தாலும் தடை செய்ய முடியவில்லை. 

தற்போது 7ம் வகுப்பு படித்துமுடித்திருக்கும் ஆசிம், கைகள் இல்லாததால், மிகவும் சிரமப்பட்டு கால்கள் மூலம் எழுத பயிற்சி பெற்றுள்ளான்.

கோழிக்கோடு மாவட்டம் வெள்ளிமன்னா பகுதியைச் சேர்ந்த ஆசிம், தனது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். அடுத்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் 5 - 10 கி.மீ. தொலைவு பயணிக்க நேரிடும் நிலை ஏற்பட்டது. இதனால் அவனது பள்ளிப் படிப்பு தடைபடும் நிலை உண்டானது.

மனம் தளராமல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினான். தான் படிக்கும் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தித் தருமாறு கோரிக்கை விடுத்தான். எந்த பதிலும் இல்லை. நீதிமன்றப் படிகளை ஏறினான்.

இன்னும் இரண்டு வார காலத்துக்குள் மொஹம்மது ஆசிமின் கல்வியைத் தொடர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயர் நீதிமன்றம், கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தான் பயிலும் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றினால் தான் மட்டுமல்லாமல் தன்னுடன் பயிலும் ஏராளமான மாணவர்கள் பலனடைவார்கள் என்று ஆசிம் கூறுகிறார்.

ஏற்கனவே இரண்டு மாத காலம் பள்ளிக்குச் செல்ல முடியாததால் வருத்தத்தில் இருக்கும் ஆசிமுக்கு கேரள கல்வித்துறை நிச்சயம் உதவும் என்று நம்பலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com