
பொதுமக்களின் மரபணு விவரங்களை அரசு சார்பில் சேகரித்து வைக்கவும், அதே சமயம், அத்தகவல்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு சிறை தண்டனை அளிக்கவும் வகை செய்யும் மரபணு தகவல் வங்கி மசோதா மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகளில் தேடப்படும் குற்றவாளிகளை கண்டறிவது, காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்த விவரங்களை கண்டறிவது, பேரிடர்களில் பாதிக்கப்படுவோரை அடையாளம் காணுவது போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த மசோதா முன்னெடுக்கப்படுகிறது.
அதே சமயம், மரபணு தகவல்களை பயன்படுத்த அனுமதி இல்லாத அமைப்புகள் அல்லது நபர்களுக்கு தெரிவிக்கும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கும் அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
சட்டவிரோதமான வகையில் பிறருடைய மரபணு தகவல்களை கோருபவர்களுக்கும் இதே அளவிலான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்படும்போது, ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுள்ள மரபணு விவரங்கள் மூலமாக அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் எதிர்ப்பு: இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளதரி எதிர்ப்பு தெரிவித்தார். மரபணு விவரங்களை சட்ட அமைப்புகளும், விசாரணை அமைப்புகளும் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
மக்களின் விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இன்றியோ அவர்களது மரபணுவை சேகரிக்க மசோதா வழிவகை செய்கிறது. இது அரசமைப்புச் சட்ட விதிகளை மீறுவதாகும். ஆகவே, இந்த மசோதாவை நிபுணர்களின் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்'' என்றார் அவர்.
அரசு பதில்: இதையடுத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதில் அளித்துப் பேசுகையில், இந்த மசோதா வாஜ்பாய் அரசின் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு போதுமான ஆய்வுகள் செய்யப்பட்டுவிட்டன.
உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதேசமயம், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





