சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி என்பது மாயை: அமித் ஷா

எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி அமைக்கவிருப்பதாகக் கூறப்படும் மகா கூட்டணி என்பது ஒரு மாயை என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். அதே சமயம் பாஜக

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி அமைக்கவிருப்பதாகக் கூறப்படும் மகா கூட்டணி என்பது ஒரு மாயை என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். அதே சமயம் பாஜக கூட்டணியில் சிவசேனை நீடிக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சி, பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார். மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணியின் உண்மை முகம் வேறு மாதிரியானது. அக்கூட்டணி நிலைத்திருக்காது; அது ஒரு மாயை. மகா கூட்டணி எங்கேயும் இருக்கப் போவதில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் அவர்கள் எல்லோரையும் எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பிராந்தியக் கட்சித் தலைவர்களான அவர்கள் எவரும் ஒருவருக்கு, ஒருவர் உதவி செய்ய முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் தேசியப் பாதுகாப்பை நாங்கள் எப்படி உறுதி செய்தோம் என்பதும், ஊழலை எப்படி வீழ்த்தினோம் என்பதுமே இத்தேர்தல் விவகாரங்களில் எதிரொலிக்கும். பாஜக ஆட்சியில் 8 கோடி குடும்பங்களுக்கு கழிப்பறை வசதியையும், 2.5 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதியையும் செய்து கொடுத்துள்ளோம்.
பாஜகவுக்காக மட்டுமல்லாமல், நாட்டில் பலமான அரசு அமைவது நாட்டின் இன்றியமையாத தேவையாகும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் உண்மையில் பாஜகவுக்கு சாதகமானதாக இல்லை. 
ஆனால், இத்தேர்தல் முடிவுகளை 2019 மக்களவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்துவது சரியானதல்ல. சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தலிலும் வெவ்வேறு விவகாரங்கள் போட்டிக்கான காரணங்களாக இருக்கின்றன.
மக்களுக்காக பணியாற்றுவதும், அவர்களை திருப்திப்படுத்துவதும் நமது கடமை. ஆனால், தேர்தல் முடிவுகள் நமக்குப் பாதகமாக அமைந்தால், அதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். 
கடந்த 2014-இல் பாஜக 6 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. தற்போது நாங்கள் 16 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். அப்படியானால் 2019 தேர்தலில் யார் வெற்றி பெற முடியும் எனக் கூறுங்கள்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யார் ஒருவர் முன்னிறுத்தப்பட்டாலும் அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை. ஏனெனில், நாங்கள் எங்களுடைய பலத்தை நம்பி களமிறங்குகிறோம்; பிறருடைய பலவீனங்களை நம்பி களமிறங்கவில்லை என்றார் அவர்.
நீதித்துறையில் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு
சீக்கிய கலவர வழக்கு தொடர்பான நீதித்துறையின் விசாரணை நடவடிக்கைகளில் தலையீடு இருந்திருக்கிறது; 1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் குறித்த வழக்கில் 34 ஆண்டுகளாக யாரும் தண்டிக்கப்படாமல் இருந்ததற்கு அதுவே காரணம் என்று பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார். 
இது தொடர்பான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்தது. வழக்கில் தண்டிக்கப்பட்ட முதலாவது அரசியல் தலைவர் சஜ்ஜன் குமார் ஆவார்.
வழக்கு தொடர்பாக வெளிவந்திருக்கும் 4-ஆவது தீர்ப்பு இது என்று அமித் ஷா சுட்டிக்காட்டினார். கடந்த 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, சீக்கிய கலவர வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவினரின் புலனாய்வு விசாரணையின் அடிப்படையில்தான் குற்றவாளியை தண்டிக்கும் அளவுக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கலவரம் நடந்த சமயத்தில் வன்முறைக் குழு ஒன்றை, மத்தியப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வரான கமல்நாத் வழிநடத்திச் சென்றதை பார்த்ததாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார். 
அதை சுட்டிக்காட்டிப் பேசிய அமித் ஷா, அந்த சம்பவத்தை பலர் பாத்திருக்கின்றனர் என்றும், இது உள்பட கலவரம் தொடர்பான பிற விவகாரங்களையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருவதாகவும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.