இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மத்தியப் பிரதேசம்: 2 பெண்கள் உள்பட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

மத்தியப் பிரதேசத்தில் 2 பெண் உள்பட 28 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர்.மத்தியப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின்

Updated On :26 டிசம்பர் 2018, 1:10 am IST


மத்தியப் பிரதேசத்தில் 2 பெண் உள்பட 28 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர்.
மத்தியப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையை கமல்நாத் செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்தார். போபாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 பெண் எம்எல்ஏக்கள் உள்பட 28 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆனந்திபென் படேல் செய்து வைத்தார். ஹிந்தியில் அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்றனர்.
அமைச்சர்களாக பதவியேற்ற 28 பேரில், ஆரீப் அஹில் என்பவர் மட்டுமே முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சர்களில் விஜய் லட்சுமி சாதோ, இமரதி தேவி ஆகிய 2 பேர் மட்டுமே பெண்கள். அமைச்சர் கோவிந்த் சிங், விஜய் லட்சுமி சதோ ஆகியோர் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்த்தன் சிங்குக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவின் சகோதரரான சச்சின் யாதவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 
அவர்கள் இருவரும் புதன்கிழமை பதவியேற்றனர். காங்கிரஸை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பிரதீப் ஜெய்ஸ்வாலும் அமைச்சராக பதவியேற்றார். அமைச்சர்கள் 28 பேரில், 18 பேர் தற்போதுதான் முதல்முறையாக அமைச்சர்களாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வென்றது. இருப்பினும், மாநிலத்தில் ஆட்சியமைக்க தனிபெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் மாநிலத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸுக்கு பகுஜன் சமாஜ் (2), சமாஜவாதி (1) கட்சிகள் ஆதரவளித்தன. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட அதிருப்தி காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேர் வெற்றி பெற்றனர். அவர்களும், காங்கிரஸுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தனர். இதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கமல்நாத் உரிமை கோரினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 109 தொகுதிகளில் மட்டுமே வென்று, ஆட்சியை பறிகொடுத்தது. இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.