எல்லையில் பாக். தொடர்ந்து அத்துமீறல்: காஷ்மீர் ஆளுநருடன் சிறப்பு பிரதிநிதி ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோராவை அந்த மாநிலத்துக்கான
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோராவை அந்த மாநிலத்துக்கான மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா சந்தித்துப் பேசினார்.
ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து ஆளுநருடன் தினேஷ்வர் சர்மா ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்துவது, மாநில இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு செல்லாத வகையில் கல்வி மற்றும் உரிய வேலைவாய்ப்பை அளிப்பது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர் என்று ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் ராணுவத்தினர் மீது இளைஞர்கள் கல்வீசித் தாக்குவது மீண்டும் அதிகரித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இதுபோன்ற சம்பவத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ராணுவம் மீது வழக்குப் பதிவு செய்ய மாநில அரசு உத்தரவிட்டது.
மத்திய உளவுத் துறையின் (ஐ.பி.) முன்னாள் தலைவரான தினேஷ்வர் சர்மா (61), கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் சட்டபூர்வமான விருப்பங்களை அவர்களுடன் பேசிப் புரிந்து கொள்ளும் நோக்கில் இந்தப் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்போது உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பிகாரைச் சேந்த தினேஷ்வர் சர்மா, 1979-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். அவர் உளவுத்துறையின் இயக்குநராக கடந்த 2014 முதல் 2016 வரை பதவி வகித்தார்.
மத்திய அரசு கடந்த 2002-இல் இருந்து காஷ்மீர் பேச்சுவார்த்தைக்காக நியமித்துள்ள நான்காவது சிறப்புப் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா ஆவார். அவருக்கு அமைச்சரவை செயலர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது, யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதை முடிவு செய்வதில் அவருக்கு முழு சுதந்திரம் உண்டு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com