சோபியான் சம்பவம்: ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தடை: உச்ச நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்க
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ராணுவ அதிகாரி ஆதித்ய குமாரின் தந்தை கரம்வீர் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உதவி செய்ய வேண்டும். ஆதலால் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள மனுக்களின் நகலை, அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் கரம்வீரின் வழக்குரைஞர் அளிக்க வேண்டும். அதேபோல், அந்த மனுக்களின் நகலை, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசிடம் கரம்வீரின் வழக்குரைஞர் வழங்க வேண்டும்.
இந்த மனுக்கள் குறித்து, ஜம்மு-காஷ்மீர் அரசு தனது பதிலை உச்ச நீதிமன்றத்திடம் 2 வாரங்களில் அளிக்க வேண்டும். இதுவரையிலும், வழக்கில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் ராணுவ அதிகாரிகள் மீது மாநில அரசு (காவல்துறை) நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சோபியான் மாவட்டம், கனோவ்போராவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் மெஹபூபா முஃப்தி உத்தரவிட்டார். இதையடுத்து, சோபியான் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ மேஜர் ஆதித்ய குமார் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மீது காஷ்மீர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ரண்பீர் தண்டனையியல் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராக கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின்கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, ராணுவ மேஜர் ஆதித்ய குமாரின் தந்தையும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான கரம்வீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com