ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வருமான வரித் தாக்கல் விதிகளில் திருத்தம்: போலி நிறுவனங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை

முறையாக வருமான வரி தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் சில நடைமுறைகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 8:00 pm

DIN

முறையாக வருமான வரி தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் சில நடைமுறைகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் போலி நிறுவனங்களின் செயல்பாடுகளை முற்றிலும் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டு முதல், அதாவது ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 12 லட்சம் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. அவற்றில் 7 லட்சம் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்து வருகின்றன. அதேபோன்று மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் ஆண்டுதோறும் கணக்குத் தணிக்கை அறிக்கையும் அவை சமர்ப்பிக்கின்றன. ஆனால், சுமார் 3 லட்சம் நிறுவனங்கள், தங்களுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லை என்று தகவல்கள் வெளியிட்டுள்ளன.
பொதுவாக, வருமான வரித் துறைச் சட்டத்தின்படி, வேண்டுமென்றே ஒரு நிறுவனத்தின் இயக்குநர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதது கண்டறியப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தி சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம்.
அதேவேளையில், அந்நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி அளவு ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதன் இயக்குநரைத் தண்டிக்க சட்டத்தில் வகை செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் போலி நிறுவனங்களைத் தொடங்கி உரிய வருமானத்தைத் தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாகத் தெரிகிறது. அல்லது ரூ.3,000-க்கும் குறைவாக வரி மதிப்பீட்டுத் தொகை வரும்படி போலியான வருமான விவரங்களைத் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக வருமான வரிச் சட்டம் கடுமையாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப, அந்தச் சட்டத்தின் 276 சிசி பிரிவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
அதன்படி, இனி வரும் நாள்களில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களின் வரி மதிப்பீட்டுத் தொகை ரூ.3 ஆயிரத்துக்குக் குறைவாக இருந்தாலும்கூட, அதன் இயக்குநர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர். புதிய திருத்தமானது ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.