11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு: அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை வெளியீடு

11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு: அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை வெளியீடு

11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை திங்கள்கிழமை வெளியானது.

தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் என்னும் இரு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக திடுக் தகவலை வெளியிட்டுள்ளது.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்த்து மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 பேர் மீது (35 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவற்றில் சிலர் மீது கடுமையான கிரிமினல் குற்றத்துக்கான வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கிரிமினல் குற்றம்சாட்டப்பட்ட முதல்வர்களின் பட்டியல்:

  • பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
  • மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்
  • தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
  • ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ்
  • உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
  • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
  • கேரள முதல்வர் பினரயி விஜயன்
  • ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி
  • புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு
  • பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்

இவர்களில் அதிகபட்சமாக மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் கொலை முயற்சி உள்ளிட்ட காரணங்களுக்காக 3 கடுமையான கிரிமினல் வழக்குகளும் அடங்கும்.

2-ஆவதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன. 3-ஆவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் கொலை முயற்சி உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகபட்சமாக 4 கடுமையான கிரிமினல் வழக்குகளில் கேஜரிவால் முதலிடத்தில் உள்ளார்.

கோடீஸ்வர முதல்வர்கள்:

அதுபோல 31 முதல்வர்களில் 25 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதிகபட்சமாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி சொத்து மதிப்பை தாக்கல் செய்து முதலிடத்தில் உள்ளார். 

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா கண்டு ரூ.129 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் 2-ஆவது இடத்திலும், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ரூ.48 கோடி சொத்து மதிப்புடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

குறைந்தபட்சமாக திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் ரூ.26 லட்ச சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.30 லட்சம் சொத்து மதிப்புடன் 2-ஆவது இடத்திலும், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி ரூ. 50 லட்சம் சொத்து மதிப்புடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

இவ்வாறு ஏஎன்ஐ (ANI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com