மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தூத்துக்குடியில் உள்ள இறக்குமதி மணலை கொள்முதல் செய்யத் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை கொள்முதல் செய்வதற்கு தயாராக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. 

Updated On :9 ஜூலை 2018, 7:55 pm

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை கொள்முதல் செய்வதற்கு தயாராக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. 
இறக்குமதி மணல் தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலின் தரம் பரிசோதிக்கப்பட்டது. அதில், சிலிக்கா அதிக அளவில் இருந்தாலும், மணலை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. இருப்பினும், இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு நிறுவனம் நிர்ணயித்துள்ள விலையை அளிக்க முடியாது. இது தொடர்பாக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைக்கு ஜூலை 11-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
எம்.ஆர்.எம். ராமையா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா, மணலுக்கு, உரிய சந்தை விலையை அளிக்க வேண்டும். மணல் விலை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்' என்றார். 
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் நாகமுத்து கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் சார்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். 
இருந்தபோதிலும், இந்த மணலுக்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் உள்ள மாநில பொதுப்பணித்துறை செயலரின் அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்கூட்டத்தில் மனுதாரர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளதால், அடுத்த விசாரணைக்குள் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த வழக்கு ஜூலை 20-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும், தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மற்றொரு மேல்முறையீட்டு வழக்கை தனியாக வேறொரு தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: இறக்குமதி மணல் தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காதது தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக அடுத்த 6 மாதங்களுக்குள் மூடவும், புதிதாக மணல் குவாரிகளை திறக்க தடைவிதித்தும்' உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 19-இல் தள்ளுபடி செய்யப்பட்டது. 
இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை கடந்த பிப்ரவரி 5-இல் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மே 16-ஆம் தேதி விசாரித்தது.
அப்போது, இறக்குமதி மணல் விவகாரத்தில் 20 நாள்களில் ரசாயன அறிக்கையை அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.