கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விடியோ பதிவு ஒன்றை ஃபேஸ்புக் எனப்படும் முகநூலில் வெளியிட்ட இந்திய இளைஞருக்கு துபையில் வேலை பறிபோனது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் எஸ்.என்.நாயர், முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர் எனக் கூறப்படுகிறது. இவர், துபையில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மூத்த மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முகநூலில் கிருஷ்ணகுமார் பகிர்ந்த விடியோ பதிவில், அவர் பேசிய விஷயங்கள் குறித்து துபை நாளிதழான தி கலீஜ் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி:
நான் முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர். நான் மீண்டும் அந்த இயக்கத்தில் இணையப் போகிறேன். நான் எனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு கேரளம் திரும்ப முடிவு செய்திருக்கிறேன்.
நான் இப்போது துபையில் இருக்கிறேன். இன்னும் 2 அல்லது 3 நாள்களில் கேரளம் வந்துவிடுவேன். முதல்வர் பினராயி விஜயனை கொலை செய்வதுதான் எனது நோக்கம்.
பழைய கத்திகளை தீட்ட வேண்டிய நேரம் வந்திருக்கிறது. என் வாழ்க்கை எப்படி முடியும் என்பது குறித்து கவலை இல்லை. நாம் ஒருவரை கொலை செய்வது என முடிவு செய்துவிட்டால் அந்த வேலையை முடித்தாக வேண்டும் என்று கிருஷ்ணகுமார் பேசியதாக தி கலீஜ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
கேரளத்தில் பாஜக மகளிரணி தலைவி ஒருவரை கடுமையாக விமர்சித்த தொலைக்காட்சி கலைஞர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், பினராயி விஜயனை கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாக கிருஷ்ணகுமார் கூறியிருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகுமார் பணியாற்றிய நிறுவனம், அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அதே சமயம், முகநூலில் கிருஷ்ணகுமார் பகிர்ந்த மற்றொரு விடியோவில், கொலை மிரட்டல் விடுத்ததற்காக பினராயி விஜயனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்.
நான் வேலையை இழந்துவிட்டேன். எந்த நடவடிக்கையையும் எதிர் கொள்ளத் தயார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடர்ந்து ஆதரிப்பேன்.
மாண்புமிகு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், அனைத்து அரசியல் தலைவர்கள், கேரள மக்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று கிருஷ்ணகுமார்
பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









