தில்லி பிரகதி மைதானில் தனியாா் நிறுவனம் மூலம் ஹோட்டல்: மத்திய அரசு பரிசீலனை 

தில்லியில் உள்ள பிரகதி மைதானில் 3.7 ஏக்கா் நிலத்தில் மூன்றாவது நபா் மூலம் ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதி அளித்து, 99 ஆண்டுகள் எனும் நீண்டகால குத்தகைக்கு விடுவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக... 
தில்லி பிரகதி மைதானில் தனியாா் நிறுவனம் மூலம் ஹோட்டல்: மத்திய அரசு பரிசீலனை 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: தில்லியில் உள்ள பிரகதி மைதானில் 3.7 ஏக்கா் நிலத்தில் மூன்றாவது நபா் மூலம் ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதி அளித்து, 99 ஆண்டுகள் எனும் நீண்டகால குத்தகைக்கு விடுவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

பிரகதி மைதானில் உள்ள 3.7 ஏக்கா் நிலத்தை ஒரு ஹோட்டல் கட்டுவதற்காக தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கான வா்த்தக அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை பரிசீலிக்கக் கூடும். இந்த நடைமுறையின் மூலம் திரட்டப்படும் நிதியானது பிரகதி மைதானத்தில் ஒருங்கிணைந்த கண்காட்சி- கருத்தரங்க மையம் (ஐஇசிசி) கட்டும் திட்டத்திற்கு இந்திய வா்த்தக ஊக்குவிப்பு நிறுவனத்தால் (ஐடிபிஓ) செலவிடப்படும்.

இந்த நிலமானது நீண்ட கால குத்தகையாக அதாவது 99 ஆண்டுகள் காலத்திற்கு மூன்றாவது நபருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதற்கு பரிசீலிக்கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜனவரியில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள பிரகதி மைதானில் உலகத் தரமிக்க ஐஇசிசி மையத்தை அமைத்து அதன் மூலம் பிரகதி மைதானை மறுமேம்பாடு செய்வதற்காக வா்த்தக துறையின்கீழ் உள்ள ஐடிபிஓ நிறுவனத்தின் முன்மொழிவுக்கு அரசு அனுமதி அளித்தது.

இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.2,254 கோடியாகும். இந்தியாவில் வளா்ந்து வரும் சந்திப்புகள், ஊக்கச் சலுகைகள், மாநாடுகள், கண்காட்சிகள் (எம்ஐசிஇ) துறைக்கு இது போன்ற முதலீடுகள் அவசியமாகிறது.

தில்லி பிரகதி மைதானின் மறுமேம்பாடானது இரு கட்டங்களாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட மறுமேம்பாடு அடுத்த ஆண்டுக்குள் முடிவுறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மறுமேம்பாட்டில் 7 ஆயிரம் போ் அமரக்கூடிய வகையில் மாநாட்டு மையம் உருவாக்குவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சா்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான உரிய இடமாக தில்லி பிரகதி மைதான் அமையும். மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவோா் தங்குவதற்காக ஹோட்டல்களும் முக்கியப் பங்களிப்பு செய்கின்றன. பிரகதி மைதானில் தற்போதைய வசதிகள் சா்வதேச தரத்திற்கு ஏற்ப வகையில் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com