தில்லி அரசின் தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 2 பேருக்கு காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தில்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் பிப்ரவரி 19-ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. முதல்வர் முன்னிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷை தாக்கியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நிதின் தியாகி, ராஜேஷ் ரிஷி ஆகியோர் சிவில் லைன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது முதல்வர் கேஜரிவால் தவிர 11 எம்எல்ஏக்கள், முதல்வரின் ஆலோசகர் வி.கே. ஜெயின், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இருந்தனர். அப்போது, தலைமைச் செயலர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளை போலீஸ் குழு ஆய்வு செய்தது. பின்னர், அதன் ஹார்டு டிஸ்க் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவத்தில் எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், ஜர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, எம்எல்ஏக்கள் நிதின் தியாகி, ராஜேஷ் ரிஷி ஆகியோரின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது' என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.