பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எந்த மதத்துக்கும் எதிரானதல்ல: மோடி விளக்கம்

பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதச் சிந்தனைகளை பரப்புபவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த மதத்துக்கும் எதிரானவை அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி
ஜோர்டான் இளவரசர் காஸி பின் முகமது எழுதிய இஸ்லாமிய மதம் தொடர்பான புத்தகத்தின் உருது மொழிபெயர்ப்பு நூலை அந்நாட்டு மன்னர் இரண்டாவது அப்துல்லாவுக்கு பரிசளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
ஜோர்டான் இளவரசர் காஸி பின் முகமது எழுதிய இஸ்லாமிய மதம் தொடர்பான புத்தகத்தின் உருது மொழிபெயர்ப்பு நூலை அந்நாட்டு மன்னர் இரண்டாவது அப்துல்லாவுக்கு பரிசளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
Updated on
2 min read

பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதச் சிந்தனைகளை பரப்புபவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த மதத்துக்கும் எதிரானவை அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, தில்லி விஞ்ஞான் பவனில் 'இஸ்லாமிய பாரம்பரியம்-அதனை மேம்படுத்துவது, புரிந்து கொள்வது மற்றும் நவீனப்படுத்துதல்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை உரையாற்றினார். மன்னரின் சுற்றுப் பயணத்தில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் இதில், பிரதமர் மோடியும், இந்தியாவில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள், மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
முஸ்லிம் இளைஞர்கள் ஒரு கையில் குரானையும், மறு கையில் கணினியையும் ஏந்தினால் மட்டுமே சமுதாயம் மேம்படும்; முழுமையான நலன் கிடைக்கும். மதத்தின் பெயரால் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே செயல்படுகிறோம் என்பதை உணர்வதில்லை.
இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாத சிந்தனைகளைப் பரப்புபவர்களுக்கும் எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. பயங்கரவாதத்தைப் பரப்புபவர்களுக்கு எதிராக ஜோர்டான் மன்னர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் ஜோர்டானுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து பெரிய மதங்களின் தொட்டிலாக இந்தியா விளங்குகிறது. பன்முகத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் இந்திய ஜனநாயகம் அமைந்துள்ளது. இங்கு அனைத்து மத நம்பிக்கைகளும் சமமாக மதிக்கப்படுகின்றன. நமது இளைஞர்கள் இஸ்லாம் காட்டும் மனிதநேய நெறிகளைக் கடைப்பிடிப்பதுடன், நவீன தொழில்நுட்பங்களிலும் வல்லவர்களாகத் திகழ வேண்டும் என்றார் மோடி.
மனிதாபிமானத்துடன் கூடிய மத நம்பிக்கை: நிகழ்ச்சியில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா பேசியதாவது:
இப்போது சர்வதேச அளவில் உலக நாடுகள் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக போர் நடத்தி வருகின்றன. இது இரு மதங்களுக்கு இடையிலான போர் அல்ல. மக்கள் மத்தியில் வன்முறையையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்துபவர்களுக்கும், அனைத்து மத நம்பிக்கைகள் குறித்த நடுநிலையான சிந்தனை உள்ளவர்களுக்கும் இடையேதான் போர் நடக்கிறது.
மத நம்பிக்கை என்பது மனிதாபிமானத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். இஸ்லாமை மேம்படுத்துவதாக கூறிக்கொண்டு தவறான தகவல்களையும், செய்திகளையும் பரப்பும் குழுக்களையும், பிற மதத்தினருக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுபவர்களையும் நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாதப் பிரசாரத்துக்கு இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது. குண்டுகளை வீசி மனிதர்களைக் கொல்லவும், உலக அமைதியைக் கெடுக்கவும் மட்டுமே அவர்களால் முடியும். நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம்தான் வலுவான, அமைதியான நாட்டை உருவாக்க முடியும்.
நாமும் அமைதியாக வாழ்ந்து, எதிர்கால சந்ததியினரும் மகிழ்ச்சியாக வாழ இந்த உலகைப் பாதுகாத்து அளிக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு என்றார் அவர்.
இந்தியா-ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா-ஜோர்டான் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு உள்பட 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். சிரியா அகதிகள் விவகாரம், பாலஸ்தீன விவகாரம் போன்ற சர்வதேசப் பிரச்னைகளும் அவர்களது விவாதத்தில் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து, இந்தியா - ஜோர்டான் இடையே பாதுகாப்புத் துறை, சுகாதாரம் மற்றும் மருத்துவம்,, பாஸ்பேட் மற்றும் உர விநியோகம் உள்ளிட்ட துறைகளில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com