வெளிநாடு தப்புவோர் சொத்து பறிமுதலுக்கு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிவிடும் மோசடியாளர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வழிவகுக்கும்
வெளிநாடு தப்பும் மோசடியாளர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து  செய்தியாளர்களிடம் விளக்கும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
வெளிநாடு தப்பும் மோசடியாளர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து  செய்தியாளர்களிடம் விளக்கும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
Updated on
2 min read

இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிவிடும் மோசடியாளர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதேபோல, தவறிழைக்கும் தணிக்கையாளர்களைக் கண்காணிக்க தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை (என்ஏஎஃப்ஆர்ஏ) ஏற்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வங்கி மோசடிகளில் தொடர்புடைய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஐ.பி.எல். முறைகேட்டில் தொடர்புடைய லலித் மோடி ஆகியோர், இந்தியாவில் இருந்து தப்பி, வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் நிலையில், அதுபோன்ற மோசடியாளர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 
அமைச்சரவை ஒப்புதல்: 'தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மசோதா' என்ற பெயரிலான அந்த மசோதாவுக்கு, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் (பிஎம்எல்ஏ) இருந்து புதிய சட்டம் வேறுபட்டதாகும். பிஎம்எல்ஏ சட்டத்தின்படி, குற்றவாளியின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியாது. அவர் பொருளாதாரக் குற்றங்களின் மூலம் சேர்த்த சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய முடியும். மேலும், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிறகே அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஆனால், புதிய சட்டத்தின்படி மோசடியாளர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும்.
ரூ.100 கோடிக்கு அதிகமான மோசடிகள்: பொருளாதார குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டவர்கள், இந்தியாவில் விசாரணையை தவிர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு தப்பி, அங்கிருந்து மீண்டும் வர மறுப்பவர்கள் மீது புதிய சட்டம் பாயும். ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்தவர்கள் இச்சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படுவர். இதன் மூலம் பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை விற்கும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள முடியும். 
தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.
தவறிழைக்கும் தணிக்கையாளர்களைக் கண்காணிக்க தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை ஏற்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து நிறுவனங்களின் தணிக்கையாளர்களும் இந்த ஆணையத்தின்கீழ் கொண்டுவரப்படுவர் என்றார் ஜேட்லி.
அடுத்தடுத்து தப்பியோட்டம்
பல்வேறு பொருளாதார மோசடிகளில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்த தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அதேபோன்று அவர்களை நாடு கடத்தி தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிகளும் இன்னமும் தொடர்ந்து வருகிறது. அவர்களில் குறிப்பிடத்தக்க சிலரின் விவரங்கள்:
விஜய் மல்லையா: பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்று தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.
லலித் மோடி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடுகளிலும், நிதி மோசடியிலும் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளின் விசாரணையைத் தவிர்க்க பிரிட்டனின் லண்டன் நகருக்குத் தப்பிச் சென்றார்.
தீபக் தல்வார்: சர்வதேச விமான ஒப்பந்தங்களில் ஒரு தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாகவும், லஞ்சம் பெற்றதாகவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்.
சஞ்சய் பண்டாரி: ஆயுதத் தரகரான இவர், ராணுவத் தளவாடக் கொள்முதல் நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்குகளைத் தவிர்க்க நேபாளம் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி: இந்தச் சூழலில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினரும் தொழில்பங்குதாரருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர் அண்மையில் நாட்டைவிட்டு தப்பியது அம்பலமானது. நீரவ் மோடியின் குடும்பத்தினரும் வெளிநாடு தப்பிவிட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை.
நீரவ் மோடி, சோக்ஸிக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தலா இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com