ஆந்திர நலனை கருத்தில் கொண்டே கூட்டணியில் இருந்து விலகினேன்: பேரவையில் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மக்களின் நலனை கருத்தில் கொண்டே கூட்டணியில் இருந்து விலகியதாக பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.
ஆந்திர நலனை கருத்தில் கொண்டே கூட்டணியில் இருந்து விலகினேன்: பேரவையில் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகியது. அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் அக்கட்சி இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சரவையில் இருந்த 2 தெலுங்கு தேசம் உறுப்பினர்களும், ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

ஒன்றுபட்ட ஆந்திரா பிரிந்த பிறகு புதிய ஆந்திர மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. இருப்பினும் போதிய அளவு நிதி ஒதுக்கியுள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறி மத்திய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இதில் எனது தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை. ஆந்திர மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நான் இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். சிறப்பு அந்தஸ்து கோரி 29 முறை தில்லி சென்று பிரதமரைச் சந்தித்தேன். பல முறை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போதைய மத்திய அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுதான்.

எனவே இதில் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாத சூழ்நிலையில்தான் நாங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினோம். பிரிவுக்குப் பிறகு ஆந்திராவுக்காக மத்திய அரசு தெரிவித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்விவகாரத்தில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி பல தடைகளைக் கடந்து வந்துள்ளது. அதுபோல இந்த சூழ்நிலையையும் எளிதில் கடந்து செல்லும். சமீபத்தில் கூட பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com