
புதுதில்லி: இந்தியாவிலிருந்து உங்கள் சேவையினை பெறுபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக, சமீபத்தில் வெளியான தகவல் பெரும் புடலைக் கிளப்பியது.
இந்த செய்தியின் தாக்கமானது தற்பொழுது இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு உள்ளது என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
முன்னதாக இந்தியர்களின் தகவல்கள் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிய வந்தால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து உங்கள் சேவையினை பெறுபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் முக்கியமாக 6 கேள்விகளை மத்திய அரசு எழுப்பி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாவது:
கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்திய இந்தியர்கள் குறித்த விபரங்களை மார்ச் 31-க்குள் அளிக்க வேண்டும். விபரங்களை அளிக்க தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்
இவ்வாறு அந்த நோட்டீஸில் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.