பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டினார் சசி தரூர்: காவல்துறை குற்றச்சாட்டு

சுனந்தா புஷ்கரை, அவரது கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் தற்கொலைக்கு தூண்டியதாக தில்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 7:02 pm

DIN

சுனந்தா புஷ்கரை, அவரது கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் தற்கொலைக்கு தூண்டியதாக தில்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சசி தரூரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்தது.
தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள அந்த 3,000 பக்க குற்றப்பத்திரிகையில், சசி தரூர் ஒருவர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டதுடன், அவருக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையோடு மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட சில துணை ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் மீது பெருநகர நீதித்துறை நடுவர் தர்மேந்திர சிங் வரும் 24-ஆம் தேதி விசாரணை நடத்துகிறார்.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவு 498ஏ (மனைவியை கொடுமைப்படுத்துதல்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் சசி தரூரின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசி தரூர்-சுனந்தா புஷ்கரின் வீட்டுப் பணியாளரான நாராயண் சிங் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, சுனந்தா புஷ்கர் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. போதிய ஆதார ஆவணங்களின் மூலமாக அதை உறுதிப்படுத்தியுள்ளதால், சசி தரூரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தேவையேற்படும்போது இந்த வழக்கு விசாரணையில் சசி தரூர் இணைந்து வந்ததால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர், கடந்த 2010 ஆகஸ்ட் 22-ஆம் தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தெற்கு தில்லியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
முதலில் சந்தேகத்துக்குரிய வழக்காக இதனை விசாரித்து வந்த போலீஸார், கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர். தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
"சசி தரூர் பதவி விலக வேண்டும்': சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசி தரூர், தனது எம்.பி. பதவியில் இருந்து உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டுமென பாஜக தலைவர் எம்.டி.ரமேஷ் கூறியுள்ளார்.
"அரசியல் நோக்கம் கொண்டது': சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் சசி தரூரின் பெயரை சேர்த்திருப்பது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை என கேரள காங்கிரஸ் கூறியுள்ளது.
கேரள காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹசன் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியையும், சங் பரிவார் அமைப்பையும் பல்வேறு சூழல்களில் சசி தரூர் கடுமையாக விமர்சித்து வருவதால், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருந்து வருகிறது.
பாசிச கொள்கை உடையவர்களே தங்களது அரசியல் எதிரிகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இது சசி தரூரின் அரசியல் பயணத்தை முடக்குவதற்கான முயற்சியாகும்' என்றார்.

"அபத்தமானது'

மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு, அபத்தமானது என்று அவரது கணவர் சசி தரூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சுனந்தா புஷ்கர் மரணத்தில் தில்லி காவல்துறை என்மீது குற்றம்சாட்டியுள்ளது அபத்தமானது. இதற்கு தகுந்த பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது, அவரை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும்.
சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி கூறியிருந்தார். ஆனால், 6 மாதத்திலேயே, நான் தான் சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை என்று சசி தரூர் தனது பதிவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.