

பிகார் மாநிலம் ஜோகிஹாட் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் சர்பிராஸ் அலாம் ராஜிநாமா செய்து ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் இணைந்தார். இதனால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பிகார் மாநிலம் ஜோகிஹாட் தொகுதிக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்கா கட்சியும் ஆதரவு தெரிவித்தன. மறுபுறத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பாஜக ஆதரவு அளித்தது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், முதல் சற்றில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பின்தங்கி இருந்தது. பின்னர், 24 சுற்றுகளின் முடிவில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாக போட்டியிட்ட ஷாநவாஸ் அலாம் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தோல்வி ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, 2 மாதங்களுக்கு முன் ஜஹான்பாத் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் அராரியா மக்களவை இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளத்தை தோற்கடித்தது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பு இருக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் இல்லாமலே அந்த கட்சி 2-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. லாலு பிரசாத் ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதால் அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் கட்சி இயங்கி வருகிறது. லாலு பிரசாத் தற்காலிக ஜாமீனில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.